காபித்தூள் ரூ.7,381… ஒரு கிலோ வாழைப்பழம் ரூ.3,336…. பசியில் கதறும் மக்கள்…!
ஒரு காபி பாக்கெட் தூள் 7381 ரூபாய், ஒரு கிலோ வாழைப்பழம் 3336 ரூபாய் என்று வட கொரியாவில் விற்கப்படுவது உலக நாடுகளை செமத்தியாக கலங்க வைத்துள்ளது.
முன் எப்போதும் இல்லாத கடுமையான நெருக்கடி, உணவு பற்றாக்குறையால் இப்போது சிக்கி தவிக்கும் நாடாக மாறி இருக்கிறது வட கொரியா. வல்லரசு நாடுகளின் கண்களின் விரலைவிட்டு ஆட்டம் காட்டி வரும் நாடு இப்போது கொரோனாவின் கோர தாண்டவத்தால் கதிகலங்கி இருக்கிறது.
உண்மை தான்… நாடு இப்போது கடுமையான உணவு பஞ்சத்தை எதிர்நோக்கி உள்ளது என்று அதிபர் கிம் ஜோங் முதன்முறையாக ஒப்பு கொண்டு இருக்கிறார். கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள சேதம், உலக நாடுகளின் பொருளாதார தடை வட கொரியாவை கடும் சிக்கலில் கொண்டு போய்விட்டு இருக்கிறது.
அதன் தாக்கம் இப்போது உணவு பொருட்களின் மீது விழுந்து மக்களை கதற வைத்துள்ளது. உணவு பொருட்களின் மீதான விலைகளே அங்கிருக்கும் நிலையை அப்பட்டமாக காட்டுகிறது.
நம்மூரில் ஒரு கிலோ வாழைப்பழம் 50 ரூபாய் முதல் தொடங்கும். காபித்தூள் குறைந்த பட்சம் முன்னணி நிறுவனங்களின் பாக்கெட்டே 2 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதை கொண்டு ஒரு கப் காபியை ஒருவர் தாராளமாக குடிக்கலாம்.
ஆனால் வட கொரியாவில் தலைநகர் பியாங்கியாங்கில் ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 3336 ரூபாய் என்றால் எப்படி இருக்கும்? மயக்கம் வருகிறதா..? அப்படியே காபிபாக்கெட் விலை உங்களை கதற வைக்கும்.. ஒரு பாக்கெட் விலை 7381 ரூபாய், டீத்தூள் பாக்கெட் 5167 ரூபாய்… கண்களில் ரத்தம் வரும் அளவுக்கு அங்குள்ளது விலை. அதே போன்று ஒரு கிலோ மக்காச்சோளம் 204 ரூபாயாக இருக்கிறது.
கடும் பொருளாதார நெருக்கடி, வருமானம் இல்லாதது, கொரோனா கட்டுப்பாடுகள் எதிரொலியாக நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதே காரணம் என்று ஐநா அறிக்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலைமை சிறிது காலம் இப்படியே தான் இருக்கும்… வடகொரியா மீண்டு வருவது கஷ்டமே என்று கணித்துள்ளனர் நிபுணர்கள்….!