இதோ ராஜினாமா கடிதம்…! காங்கிரசில் இருந்து விலகினார் குஷ்பு…!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக நடிகை குஷ்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தொடர்பாளரான குஷ்பு அண்மையில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பேசினார். இதுதொடர்பாக காங்கிரசில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அப்போதே அவர் பாஜகவுக்கு தாவுகிறார் என்று தகவல்கள் வெளியாகின.
இந் நிலையில் நேற்றிரவு திடீரென சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்றார் குஷ்பு. அவர் இன்று மதியம் 1 மணியளவில் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைய உள்ளார் என்று தகவல்கள் கூறின. அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ளார் குஷ்பு.
இதன் மூலம் பாஜகவில் அவர் சேருவது உறுதியாகி உள்ளது. சோனியாவுக்கு எழுதியுள்ள விலகல் கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ள அவர், கட்சிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகளையும் போட்டு உடைத்துள்ளார். கட்சிக்குள் யார் என்ன செய்கிறார்கள்? எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதையும் விளக்கி உள்ளார்.
கட்சிக்காகவும், மக்களுக்காகவும் உண்மையாக உழைக்க வந்த தம்மை போன்றவர்களுக்கு இது பெரிய ஏமாற்றத்தையும், மன அழுத்தத்தையும் தந்ததால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் கூறி உள்ளார்.