நீங்க ‘லேட்டு’… நாங்க ‘லேட்டஸ்ட்டு’… மோடியை தெறிக்கவிட்ட ஸ்டாலின்
சென்னை: பிரதமர் மோடியின் வருகை தாமதமாகிவிட, குறித்த நேரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி இருக்கிறது தமிழக அரசு.
சென்னையில் பெருமைமிக்க சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா பெரும் கோலாகலத்துடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி உள்ளது. வண்ண, வண்ண விளக்குள் ஒளி வெள்ளத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனங்கள் என்று களைகட்டியது.
இந்த துவக்க விழாவில் பிரதமர் மோடியின் வருகை எதிர்பாராமல் திடீரென தாமதமானது. பிற்பகல் 2.20 மணிக்கு அகமதாபாதில் இருந்து கிளம்பி 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வரவேண்டும்.
ஆனால் அகமதபாதில் இருந்து 3.10 மணியளவில் தான் பிரதமர் மோடி விமானத்தில் புறப்பட்டார். அதனால் மாலை 5.10 மணிக்கு தான் சென்னை விமான நிலையம் பிரதமர் மோடி வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு சென்று அங்கிருந்து சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு சாலை மார்க்கமாக பயணித்தார்.
அவரது வருகை தாமதம் ஆனது ஒரு பக்கம் இருந்தாலும் விழாவும் தாமதமாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி நிரலில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. முன்பே என்ன தீர்மானிக்கப்பட்டதோ அதன்படி கலை நிகழ்ச்சிகள், கொடிகளுடன் கூடிய விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு உள்ளிட்டவை நடைபெற்றன.
பிரதமர் வருகை தாமதம், ஆனால் நிகழ்ச்சி நிரலில் மாற்றமில்லையா? என்பது பாஜகவினருக்கு வருத்தத்தையும், அதிர்ச்சியையும் தந்தாலும் வழக்கம் போல் இதில் நாங்கள் தான் ஸ்கோர் செய்துள்ளோம் என்று திமுக உடன்பிறப்புகள் சமூக வலைதளங்களில் உலா வர ஆரம்பித்துள்ளனர்.