கடைசியில் அவரை ‘டிக்’ அடித்த தலைமை..! தமிழக பாஜக புதிய தலைவர் நியமனம்
டெல்லி: தமிழக பாஜகவின் புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 2 நாட்களில் தமிழக பாஜகவில் பலப்பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் மத்திய அமைச்சராக அறிவிக்கப்பட அவர் பொறுப்பும் ஏற்றுக் கொண்டார். தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடைத்துறை இணையமைச்சர் அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
எல். முருகன் மத்திய அமைச்சரானதால் அவருக்கு பதிலாக யாரை அடுத்த தமிழக தலைவராக யார்? என்ற கேள்விகள் எழுந்தன. வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன் என பல பெயர்கள் அடிபட்டன. ஏன்.. மதுரை டாக்டர் சரவணன் பெயரும் சந்தடிசாக்கில் வந்து சென்றது.
இப்படி யூகங்கள் இருந்தாலும் யார் தலைவர் என்ற சஸ்பென்சை இன்று உடைத்து இருக்கிறது பாஜக தேசிய தலைமை. தமிழக பாஜக துணை தலைவராக இருந்த அண்ணாமலையை தலைவராக நியமித்து டெல்லி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் அருண் சிங் அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதிகபட்சமாக அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் 4 வரிகள் இடம்பெற்றுள்ளன. தேசிய தலைவர் ஜேபி நட்டா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக அறிவித்துள்ளார் என்று கூறி உள்ளார். அவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது குறித்து அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலை அண்மையில் முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.