உன் சோறு யாருக்கு வேணும்…? அண்ணாமலையை துரத்திய பாட்டி
சென்னை: வெறும் 50 பேருக்கு மட்டுமே சாப்பாடு கொண்டு வந்த பாஜக தலைவர் அண்ணாமலையை பாட்டி ஒருவர் அதிரடியாக கேள்வி கேட்டு துரத்தி விட்டுள்ளார்.
மக்கள் பாதிப்படைந்தால்… அரசியல்வாதிகள் பலர் கவலைப்படுவர்,சிலர் குதூகலப்படுவர், இன்னும் சிலர் எதை பற்றியும் கண்டுகொள்ளாமல் இருப்பர்.
அரசியல்வாதிகளில் இப்படி ஒரு ரகம் இருந்தாலும் அதிரடி அரசியலில் பாஜகவில் தனித்து நிற்பவர் இப்போதைய தலைவர் அண்ணாமலை. மக்களுக்கு ஒன்று நின்றால் வந்து நிப்பேன் என்று தொடர்ந்து கூறி வருபவர்.
தற்போது சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து பலரும் மெல்ல, மெல்ல மீண்டு வருகின்றனர். 36 மணிநேரம் இடைவிடாது பெய்து தள்ளிய மழையால் எங்கும் தண்ணீர்மயம். வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் பலரையும் மீட்புப்படையினர் மீட்டு வருகின்றனர்.
அரசும், அரசியல்வாதிகளும் களத்துக்கு சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை தொகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை காண சென்றிருக்கிறார்.
அவரை மக்கள் வரவேற்ற விதமே ஆவேசமாக இருந்தது. 120 வீடுகள் கொண்ட, 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இங்கு தொண்டர்களும் வந்திறங்கினார் அண்ணாமலை. அவரை மக்கள் சூழ்ந்து கொள்ள, நலம் விசாரிக்க ஆரம்பித்தார்.
அப்போது அங்கு வந்த பாட்டி ஒருவர், அண்ணாமலையை திணறடித்தார். எத்தனை பேர் இருக்காங்க? 50 பேருக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்துட்டு போட்டோ எடுத்து போட வந்திருக்கீங்களா? எங்க கோரிக்கையை முதல்ல கேளுங்க
சாப்பாடும் வேணாம், ஒண்ணும் வேணாம்… மொதல்ல உள்ள வந்து தண்ணியில இறங்கி பாருங்க… என்று கேட்டு அதிர வைத்திருக்கிறார்.
இதை எதிர்பாராத அண்ணாமலையோ சாப்பிடுங்க, சாப்பிடுங்க என்று மழுப்பவே விடாமல் அந்த பாட்டி கேட்டுக் கொண்டே இருக்கிறார். பின்னர் நைசாக கட்சி தொண்டர்கள் பாட்டியை நகர்த்தி கொண்டு சென்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் ஆவேசமான அந்த வீடியோ இங்கே கீழே தரப்பட்டு உள்ளது.