கிடைச்சாச்சு ‘க்ரீன்’ சிக்னல்…! குஷியில் சசிகலா…! கவலையில் எடப்பாடி
டெல்லி: அரசியல் களத்தில் இறங்க டெல்லி மேலிடம் க்ரீன் சிக்னல் காட்டியதால் தான் சசிகலா வேகமாக இயங்கி வருகிறார் என்ற பேச்சு அதிமுகவில் எழ ஆரம்பித்துள்ளது.
யாரும் எதிர்பார்க்கவில்லை… அவைத்தலைவர், கட்சியின் மூத்த தலைவர் மதுசூதனனை சந்திக்க மருத்துவமனைக்கு சசிகலா வருவார் என்று. அதுவும் எடப்பாடி பழனிசாமி வரும் அதே நேரத்தில்… இந்த 2 நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் எதிர்பாராமல் நடந்தவை.
ஆனாலும்.. அதன் பின்னணியில் உள்ள சுவாரசியங்களை ஆழமாக கவனிக்க ஆரம்பித்து இருக்கின்றனர் அதிமுக சீனியர்கள். குறிப்பாக சிறைவாசம், விடுதலை, அரசியல் துறவு, பின்னர் ஆன்மீக சுற்றுப்பயணம் என்று இருந்த சசிகலா ஆடியோ அரசியலை கையில் எடுத்திருப்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
தொடக்கத்தில் மிக சாதாரணமாக எடுத்துக் கொண்ட கட்சி தலைமை… ஆடியோ அரசியல் டேப்புகளின் எண்ணிக்கை அதிகமாக மாவட்டம் தோறும் சசிகலாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிட்டது. பல மாவட்டங்களில் இது செய்து காண்பிக்கப்பட்டது.
எதை பற்றியும் கவலைப்படாமல் வருவேன், கவலைப்படாதீங்க, வந்துடுவேன் என்ற சசிகலாவின் பேச்சுகள் அவருடன் பேசியவர்களுக்கும், கட்சியில் அவரது அபிமானிகளுக்கும் ஹேப்பியாகத்தான் இப்போதும் இருக்கிறது.
அதிலும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் சசிகலா பேட்டியை கண்டு மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள் திக்குமுக்காடி இருக்க… அதிமுக தலைமையோ அதிர்ச்சியில் இருப்பதாக தான் இன்றளவும் தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
எப்படி நடந்தது இந்த மேஜிக் என்று பார்த்தால்… கட்சியில் நடப்பதை அனைத்தும் அருகில் இருந்து உற்றுப்பார்க்கும் முக்கிய பிரமுகர்கள் சொல்வது வேறாக இருக்கிறது. அவர்கள் கூறிய தகவல்கள் இதுதான்:
அதிமுகவில் இன்றளவும் பெரும்பாலானவர்கள் சசிகலாவால் பயன் பெற்றவர்கள். சில முக்கிய தலைவர்களும் அவரால் பயன் அடைந்தவர்கள். ஆகவே தான் அவர்கள் வாய் திறக்க மறுக்கிறார்கள். ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட ஒருசிலர் தான் ஓபனாக சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் யாரும் இது பற்றி கருத்துகளை முன் வைப்பதே இல்லை.
நடக்கும் அனைத்தும் உற்று பார்த்துக் கொண்டிருக்கும் எடப்பாடி, ஒரு கட்டத்தில் அனைத்து குரல்களும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் செல்வதை அறிந்து தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக பங்கேற்காது என்ற அறிவிப்பை வெளியிட செய்தார்.
சசிகலாவின் சுற்றுப்பயணம் விரைவில் அரங்கேறும், அப்போது ஊடகங்களில் முதல் விவாதம் அவரை பற்றியது தான் என்று ஊகித்து தான் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுதவிர, டெல்லியில் இருந்து சசிகலாவுக்கு ஓகே சொல்லிவிட்டதாகவும், அதன் பிறகுதான் பிரபல தொலைக்காட்சியில் பேட்டிக்கு தயாரானார். எகிறும் ஆதரவு கிராப்பை அறிந்து எடப்பாடி கொஞ்சம் பின்வாங்க ஆரம்பித்துவிட்டார். விரைவில் தமிழகம் முழுவதும் சசிகலாவின் சுற்றுப்பயணம் தொடங்கும், நிலைமைகள் மாறும் என்கின்றனர்.