சீட் கிடைக்காதவங்க என்ன பண்ண வேண்டும்..? கட்சியினருக்கு ஸ்டாலின் சொன்ன அந்த விஷயம்….
சென்னை: தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், அடம்பிடிக்க கூடாது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறி உள்ளதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். ஜனநாயக அறப்போர்க்களமான தேர்தல் களத்திற்கு கழகத்தின் தீரர்கள் ஆயத்தமாகி விட்டார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் நம்முடன் இல்லாத கழகத்தின் முதல் சட்டமன்ற வேட்பாளர் பட்டியல் என்பது இதயத்தை அழுத்தினாலும், அதன் ஒவ்வொரு துடிப்பிற்கும் கர்த்தாவாக அவர்தானே இருக்கிறார்; அவர்தானே நமக்கு விசையேற்றி நாள்தோறும் வேகமாக இயக்குகிறார்; அவர்தானே கழக உடன்பிறப்பு ஒவ்வொருவர் முகத்திலும் ஒளி உமிழ்ந்து பிரகாசிக்கிறார் என்கிற உணர்வுடனும் உத்வேகத்துடனும் - மிகுந்த கவனத்துடன் வேட்பாளர் பட்டியலைத் தயாரித்தேன்.
இந்த வெற்றிப் பட்டியல் 173 என்ற எண்ணிக்கையுடன் நிறைவடைந்து விடவில்லை. தோழமைக் கட்சியினர் போட்டியிடும் 61 தொகுதிகளையும் உள்ளடக்கியதுதான் நமது வெற்றிப் பட்டியல். 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே கழக வேட்பாளர்கள்தான். சில தொகுதிகளில் சின்னங்கள் மாறியிருக்கலாம். ஆனால் ஒருங்கிணைந்த வலிமை மிகுந்த நமது எண்ணம் ஒன்றுதான்; அது ஒருபோதும் மாறாதது. மதவாதப் பாசிச சக்திகளுக்குத் துளியளவும் தமிழ்நாட்டில் இடம்கொடுக்காமல், அந்த பிற்போக்குச் சக்திகளுக்குத் துணை நிற்கின்ற அடிமைக் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக விரட்டி அடிப்பது ஒன்றே தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் ஒற்றை இலக்கு. அந்த ஒற்றை இலக்கினை வென்றெடுக்க 234 வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள். அதில் கழகத்தின் சார்பில் 173 வீரர்கள் நிற்கிறார்கள்.
வெற்றிப் பட்டியலைத் தொடர்ந்து, களத்தின் கதாநாயகனான கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியாக இருக்கிறது. திருப்புமுனை ஏற்படுத்திய திருச்சி சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுபோல, இந்தத் தேர்தல் களத்தில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெறுவது உறுதி. மக்களின் மனநிலையும் ஆதரவும் அதனை வெள்ளிடை மலை போல் வெளிப்படுத்துகிறது. ஆனால், அந்த வெற்றியை எளிதாக அடைவதற்கு விடமாட்டார்கள். அதிகார பலம் கொண்டவர்கள் அத்தனை தந்திரங்களையும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் செய்வார்கள். அவற்றை முறியடித்திட உங்களில் ஒருவனான நான் என் சக்திக்கு மீறி உழைக்கிறேன். உடன்பிறப்புகளாம் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பையும் ஒத்துழைப்பையும் விரும்பி வேண்டி எதிர்பார்க்கிறேன்.
வெற்றியன்றி வேறில்லை என்கிற ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம். மாச்சரியங்களுக்கு இடம்கொடுக்காமல், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வெற்றியினை ஈட்டிடக் களப்பணியாற்றுவோம். வரலாறு போற்றும் வெற்றியை தலைவர் கலைஞர் நினைவிடத்தில் நாம் அனைவரும் காணிக்கையாக்குவோம்! என்று அறிக்கையில் குறிப்பிட்டார்.