வீட்டை விட்டு வராதீங்க…! சென்னை மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை: தொடர்மழை காரணமாக சென்னை மக்கள் 3 நாட்களுக்கு தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்குமாறு ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறார்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்துள்ளது.
குறிப்பாக சென்னையில் விடிய, விடிய மழை பெய்து தள்ளி இருக்கிறது. கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, தாம்பரம், வடபழனி, கோயம்பேடு, பெருங்களத்தூர் என பெரும்பாலான பகுதிகளில் மழை பிரித்து மேய்ந்துள்ளது. எங்கும் மழைநீர் தேங்கியதால் மக்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகினர்.
இந் நிலையில், அடுத்த 3 நாட்கள் சவால் மிகுந்ததாக இருக்கும் என்றும், அவசியம் இன்றி சென்னை மக்கள் வெளியில் வருவதை தவிர்க்குமாறு ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறி உள்ளதாவது:
சென்னையில் பல இடங்களில் 6 சென்டி மீட்டருக்கு அதிகமாகவே மழை பதிவாகி உள்ளது. இரவு நேரத்திலும் வருவாய்துறையினரை அலர்ட்டாக வைத்துள்ளோம்.
அனைத்து பகுதிகளிலும் ஊழியர்கள் போர்க்கால நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இந்த முறை அதிக மழை பெய்துள்ளது. கொளத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் வடிகாலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு கமாண்டோ படையினர் தயார் நிலை உள்ளனர். மழை நிலவரம் மேலும் நீடிக்கும், கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்களுக்கு ஒரு வேண்டுகோள். அவசியம் இல்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.