எடப்பாடியை வுடமாட்டோம்…! இதுல கழுவி வேற ஊத்திட்டாய்ங்களே…!
சென்னை: ஒரு முன்னாள் முதலமைச்சர் என்றும் பாராமல் எடப்பாடி பழனிசாமியை கழுவி ஊத்தியிருக்கிறது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி.
மக்கள் பிரச்னையில் அரசியல் என்பது நல்லதுக்காக என்றால் பரவாயில்லை. அரசியலுக்காக மக்களின் நலன்களை குறை சொல்வது என்றால் எப்படி இருக்கும்?
அதுவும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் போது சொந்த சாதிக்காரரின் விழாவில் கலந்து கொண்டாரே எடப்பாடி என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் ஒரு பேட்டியில், கமலை அரசியல்வாதியாக பார்க்கவில்லை, பச்சோந்தி போட்டு தாக்கிவிட்டு போய்விட்டார்.
இதுதான் நேரம் என்று மக்கள் நீதி மய்யம் எடப்பாடி பழனிசாமியை வறுத்து தள்ள ஆரம்பித்து இருக்கிறது. இப்படித்தான் என்று இல்லை… கூவத்தூர் சமாச்சாரம் வரை இழுத்து வைத்து கும்ம ஆரம்பித்து உள்ளனர்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தமது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள அறிக்கை;
தமிழகத்தின் தலைநகரம் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, எங்கோ ஓடிப்போய் பதுங்கிக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கும் கமல்ஹாசனை பச்சோந்தி என்று விமர்சித்திருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.
தமிழக முதல்வரும், மாநில அரசும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் இருக்கிறார் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாத, யாரையும் விமர்சிக்கத் தகுதியே இல்லாதவர், தன்னலமின்றிப் பணிபுரிவோரை குறைகூறுவதை பொதுமக்கள் மட்டுமல்ல, அவருடைய கட்சியினரே ஏற்கமாட்டார்கள்.
2015-ம் ஆண்டில் சென்னையே வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தபோது, தமிழகத்தை ஆண்ட முதல்வர் எங்கே இருக்கிறார், எந்த நிலைமையில் இருக்கிறார் என்றே மக்களுக்குத் தெரியாத நிலை இருந்தது. அப்போதும் இவர்கள் யாரும் களத்தில் இல்லை, இப்போதும் மக்களுடன் இல்லை.
பதவி, அதிகாரத்தைத் தக்கவைக்கவும், சிறைப் பறவையாகாமல் இருப்பதற்காகவும் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் அடிமையானார். வாழ்வு அளித்தவருக்கே துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியை பச்சோந்தி என்று விமர்சித்தால், பச்சோந்திக்குத்தான் அவமானம். உயிர்ச்சூழலில் பச்சோந்திக்கும் முக்கியப் பங்கு உண்டு. எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்த முக்கியத்துவமும் கிடையாது.
எனவே, தனது கொள்கையில் மாறாமல் இருக்கும் கமல்ஹாசனை விமர்சிப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கடுமையாக எச்சரிக்கிறோம். இனியும் ஏதாவது பேசினால், இவர் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றாமல் விடமாட்டோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.