செல்பி எடுத்து ‘எமனை’ கூப்பிட்ட இளைஞர்…! நெஞ்சை உருக்கும் சம்பவம்..!
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே செல்பி எடுத்த டிராக்டருடன் 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய கால இளைய தலைமுறையினர் உணவில்லாமல் கூட இருந்து விடுவார்கள்.. ஆனால் செல்போனும், செல்பியும் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு மோகம் கொண்ட செல்போன் செல்பி இப்போது ஒரு இளைஞரின் உயிரை குடித்திருக்கிறது.
வாணியம்பாடியை அடுத்துள்ள சின்ன மோட்டூம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி. தமது உறவினரான சவுந்தர்ராஜன் என்பவருடன் ராஜேந்திரன் என்பவரின் விளைநிலத்தில் டிராக்டர் கொண்டு ஏர் உழுது கொண்டு இருந்துள்ளனர்.
பின்னர் உணவருந்தும் நேரம் என்பதால் சவுந்தர ராஜன் சாப்பிட சென்றுவிட்டார். அப்போது அங்கேயே இருந்த சஞ்சீவி மூளையில் வித்தியாசமாக ஏதோ உதிக்க டிராக்டர் ஓட்டுவது போல் செல்பி போட்டோ எடுத்து தமது போனில் ஸ்டேட்ஸ் வைத்தார்.
அடுத்த சில நிமிடங்களில் டிராக்டர் ஸ்டியரிங்கை பிடித்து வண்டி ஓட்ட முயற்சித்துள்ளார். ஓட்ட தெரியாமல் ஓட்டியதால் டிராக்டருடன் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்திருக்கிறார்.
கண நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட அருகில் இருந்தவர்கள் சஞ்சீவியை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் அது நடக்காமல் போகவே காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
அவர்கள் வந்து கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றி டிராக்டரையும் சஞ்சீவியையும் மீட்டனர். ஆனால் அதற்குள் சஞ்சீவி உயிரைவிட்டுவிட்டார். உயிர் துறக்கும் முன்பாக அவர் எடுத்த ஸ்டேட்ஸ் விஷயம் வெளியே தெரிய அவரது உறவினர்களும், ஊர் மக்களும் கதறி அழுதுள்ளனர். செல்பி மோகம் ஒரு உயிரை பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.