பாஜகவில் காசு இருந்தால் பதவி…! ஸ்டாலினிடம் மேடையில் பொங்கிய Ex. பெண் நிர்வாகி
பொள்ளாச்சி: பாஜகவில் கடந்த ஓராண்டாக காசு கொடுத்தால் தான் பதவி கிடைக்கிறது என்று திமுகவில் இணைந்த பாஜக முன்னாள் நிர்வாகி மைதிலி குற்றம்சாட்டி உள்ளார்.
கோவை மாவட்டம் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் மைதிலி வினோ. பாஜகவில் 1999ம் ஆண்டு முதல் இயங்கி வந்தவர். கட்சி நிர்வாகி, மாவட்ட பொறுப்பு என படிப்படியாக உயர்ந்து மகளரணி செயலாளராக முன்னேறியவர். கோவை மாவட்டத்தில் உள்ள பாஜகவில் இவரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
பாஜக கட்சியில் மகளிர் இல்லாத கால கட்டத்தில் அக்கட்சியில் இருந்து வந்தவர். அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து பேச பெரும் பரபரப்பு உருவானது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கி இருப்பதாக பாஜக அறிவித்தது.
இந் நிலையில், பொள்ளாச்சியில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று தம்மை முறைப்படி திமுகவில் இணைத்து கொண்டார் மைதிலி வினோ. நிகழ்ச்சியில் மேடையில் அவருக்கு உட்கார இடம் தரப்பட்டது. பின்னர் அவருக்கு பேச வாய்ப்பும் அளிக்கப்பட்டது.
பேசப்போகும் போது முதல்வர் ஸ்டாலினை கைகூப்பி வணங்கிவிட்டு நேராக மைக் பிடித்தார் மைதிலி. தம்மை யார் என்று அறிமுகம் செய்து கொண்ட அவர் அடுத்த பேசிய விஷயங்கள் தான் ஹைலைட்.
அவர் பேசியதாவது: அய்யா… நான் கடந்த 1999ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தேன். அப்போது நான் மாவட்டத்தின் மகளிரணி பொது செயலாளர். சிறுக சிறுக பணிகள் செய்து நான் மகளிரணி மாநில செயலாளரானேன்.
ஆனால் கடந்த ஓராண்டு காலமாக பாஜகவில் பணம் படைத்தவர்களுக்கே பதவி என்று நிலைமை மாறியது. அந்த சமயத்தில் நான் அங்கிருந்து வெளியேறினேன். மகளிருக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பெண்களுக்காக பாடுபடுவேன் என்று உறுதியளிக்கிறேன்.
உலகத்துக்கு எப்படி ஒரு சூரியனோ, அதுபோல தமிழ்நாட்டுக்கு ஒரு சூரியன் தான் என்று கூறி வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் என்று பேசி உள்ளார்.