டோக்கியோ ஒலிம்பிக்..! 100 ஆண்டுகள் கழித்து தங்கம் ‘ஈட்டி’ய நீரஜ் சோப்ரா
டோக்கியோ: ஒலிம்பிக்கில் தடகள பிரிவில் 100 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் கிடைத்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் இந்தியா இந்த முறை பல சாதனைகளை படைத்து, பாராட்டுகளை பெற்று வருகிறது.
இன்றைய ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதி சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். 6 முறை வீரர்கள் ஈட்டியை எறிய வேண்டும். அதில் அதிக தூரம் வீசுபவர் தங்கப்பதக்கத்துக்கு தேர்வு செய்யப்படுவார்.
3 சுற்றுகள் முடிந்த பின்னர் 12 வீரர்கள் என்பது 8 வீரர்களாக குறைக்கப்படும். அதில் முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா 87.03 மீட்டர் ஈட்டியை எறிந்தார். 2வது முயற்சியில் 87.58 மீட்டரும், 3வது முயற்சியில் 76.79 மீட்டரும் ஈட்டியை எறிந்தார்
முதல் 4 முறை ஈட்டி வீசியதில் நீரஜ் முதலிடம் பிடித்தார். 5வது, 6வது முயற்சியிலும் நீரஜ் சோப்ரா முதல் இடம் பிடித்த நீரஜ் தங்கம் வென்றார். ஒலிம்பிக் தடகளத்தில் இந்திய 100 ஆண்டுகள் கழித்து பெறும் முதல் தங்கம் இதுவாகும். தங்க மகன் நீரஜ்க்கு உலகம் எங்கும் உள்ள இந்தியர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.