சசிகலாவுக்கு ‘செக்’ வைக்கும் முன்னாள் அமைச்சர்…! போலீஸ் எடுத்த மெகா நடவடிக்கை
சென்னை: சசிகலா மீது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார் சசிகலா. ஆனால் கடந்த 2 வாரங்களுக்கும மேலாக, அவரின் ஆடியோ அரசியல் தான் அதிமுக வட்டாரத்திலும், தமிழக அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்கள், தொடர்பில் இருப்பவர்கள் அனைவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டம் தோறும் அதிமுக ஆலோசனை கூட்டம் நடத்தி சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந் நிலையில், கடந்த 9ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சசிகலாவுக்கு எதிராக ஒரு புகாரை போலீசில் கொடுத்திருந்தார். இந்த புகார் திண்டிவனத்தில் உள்ள ரோசனை காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.
அந்த புகாரில் அவர் கூறியதாவது: ஜூன் 7ம் தேதி சசிகலா பற்றி சில கருத்துகளை பேட்டியாக அளித்தேன். அதற்கு சசிகலா அடியாட்களை வைத்து செல்போன், சமூக வலைதளங்கள் மூலம் அநாகரிகமாக பேசி, பதிவிட்டு வருகின்றனர்.
கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட முறை போன் வந்துள்ளது, கொலை மிரட்டல்கள் வருகின்றன. என்னையும், என் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என்று கூறி வருகின்றனர். ஆகையால் சசிகலா மீதும், செல்போனில் எனக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் 506(1) – கொலை மிரட்டல், 507 – எங்கிருந்து அழைக்கிறோம் என்று குறிப்பிடாமல் அநாகரிமகாக பேசுதல், 109 – அடுத்தவரை தூண்டிவிட்டு கலவரம ஏற்படுத்தும் வகையில் பேசுதல், 67(ஐபி சட்டம்) தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.