#Ponmudi 3 ஆண்டுகள்…! மனைவிக்கும் அதே.. அதே…!
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக கிட்டத்தட்ட ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சி மீது 2006ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்த நிலையில் அதை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதில் பொன்முடி விடுதலையை ரத்து செய்ததோடு அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விவரங்களை இன்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.அதன்படி, அவருக்கும், மனைவிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இருவரும் அபராதமாக தலா 50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். அவர் அமைச்சராக இருப்பதால் 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தார். தண்டனையை தொடர்ந்து எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை பொன்முடி இழந்துள்ளார்.