வேட்பாளரை சாய்த்த ‘சாதி’….! இனி பேசுவீங்க…?
சாதிய வன்மம், சாதிய ஆணவம், சாதிய கட்டுப்பாடு என எப்படி பேசினாலும் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக சாதி வெறி பேச்சில் சிக்கிய கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றப்பட்டு உள்ளார்.
சாதிய ஆணவம் சாதாரணமானது அல்ல… ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழி வகை செய்வதே ஜனநாயகம். ஆனால் ஆண்ட சாதி, ஆணவ சாதி என்று பேசி சிக்கிய வேட்பாளர் சூரியமூர்த்தி. அவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அவரது பெயர் வெளியான தருணத்தில் இருந்தே சாதிய வேட்பாளர் என்ற விமர்சனம் எழுந்தது. ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களுக்கு எதிராக அவர் மேடைகளில் முழங்கிய வீடியோக்கள் வலம் வந்தன. சாதி வெறி வேட்பாளருக்கு உங்கள் ஓட்டு என்ற கருத்துகளும் வந்து விழுந்தன.
எனவே, வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற குரல் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரிடம் இருந்தும் ஒலிக்க ஆரம்பித்தது. இதையடுத்து, தற்போது சூரிய மூர்த்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாதேஸ்வரன் களம் இறங்குவார் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டு உள்ளார். மக்கள் மத்தியிலும், மற்ற கூட்டணிக் கட்சிகள் மத்தியில் இந்த முடிவு வரவேற்பை பெற்றிருந்தாலும், இந்த வேட்பாளரும் ஏதேனும் பேசி வம்பில் சிக்கியிருக்காரா என்று ஒரு க்ரூப் பழைய வீடியோக்களை தேடி ஓடியிருப்பது தனிக்கதை….!