10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களா..? நாளைய தினத்தை 'மிஸ்' பண்ணாதீங்க…!
சென்னை: பள்ளி மாணவர்களுக்காக நாளை கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்களை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கடந்தாண்டை போல இந்தாண்டும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் இன்னமும் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. கொரோனா தொற்று எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் மாணவர்களின் கல்வி முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக பள்ளி மாணவர்களின் கல்வி பெரிதும் சிக்கலாக மாறியது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமல் கடந்த கல்வியாண்டு நிறைவு பெற்றது. இப்போது அடுத்த கல்வியாண்டும் திறக்கப்பட்டு விட்டது.
ஆனாலும் கொரோனாவின் தொற்று இன்னமும் முழுமையாக நீங்காததால் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தமிழகத்திலும் இதே நிலை தான் நீடிக்கிறது. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற சூழல் தெரியாத நிலை தான் உள்ளது.
எது எப்படி இருந்தாலும் பள்ளி மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது என்பதில் தமிழக அரசு திண்ணமாக உள்ளது. பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என்பதால் வேறு ஒரு புதிய முயற்சியை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது.
மாணவர்களின் வீடுகளுக்கே தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை சொல்லித் தரலாம். நிலைமை முழுவதும் கட்டுக்குள் வந்துவிட்ட பின்னர் பள்ளிகளை திறக்கலாம் என்று எண்ணியுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்து வருகிறது.
அரசு பள்ளி மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக நடப்பு கல்வியாண்டு பாடங்களை கல்வி தொலைக்காட்சி வழியாக மாணவர்களுக்கு அளிக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக கல்வி தொலைக்காட்சி வழியே இந்தாண்டுக்கான பாடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து இந்த பாடங்களை அவர் நாளை தொடங்கி வைத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களையும் அவர் வழங்குகிறார்.