50 நாள் தான்…! ஸ்டாலின் வீட்டு வாசலுக்கு போகும் அண்ணாமலை…!
சென்னை: 50 நாள் தான் டைம்…. ஸ்டாலின் வீட்டு வாசலில் போராட்டம் நடத்துவோம் என்று கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக தலைவர் அண்ணாமலை களம் இறங்கி உள்ளார்.
தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை அறிவித்ததில் இருந்து பாஜக பல்வேறு போராட்டங்களில் இறங்கி வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
பின்னர், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசை கண்டித்து, தஞ்சையில் பாஜக போராட்டம் நடத்தியது. கொரோனா விதிகளை பின்பற்றாமல் போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்ளிட்ட பல பேர் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இப்போது வேறு ஒரு விவகாரத்தை முன்வைத்து, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கெடு ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது, கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய 1400 கோடி நிலுவை தொகையை 50 நாட்களில் வழங்க வேண்டும், இல்லை என்றால் முதல்வர் வீட்டு வாசலில் போராடுவோம் என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய 1400 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வேண்டும். 50 நாட்களில் நிறைவேற்றத் தவறினால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு வாசலில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.
அவரின் இந்த பதிவை கண்டு திமுகவினர் முணுமுணுக்க ஆரம்பித்து உள்ளனர். கர்நாடகாவில் நடப்பது பாஜக ஆட்சி, அதாவது இவர்கள் ஆட்சி… மேகதாது அணை விவகாரம் குறித்து எளிதாக அணுகலாம், அதை விட்டுவிட்டு பாஜக போராட்டம் நடத்தியது, அதாவது பாஜகவை எதிர்த்து பாஜகவே போராட்டம் நடத்தி இருககிறது? இதை எப்படி எடுத்து கொள்வது என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.