சி.எம் போஸ்ட் தான்…! வேற ஒண்ணும் வேண்டாம்…! காங்கிரசை கதறவிடும் திமுக…!
புதுச்சேரி: புதுச்சேரியில் முதலமைச்சர் பதவி தங்களுக்கு தான் வேண்டும் என்று காங்கிரசை இப்போது நெருக்க ஆரம்பித்துள்ளது திமுக.
புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் வெகு வேகமாக கட்சி பணியாற்றி வருகின்றன. பாஜக, அதிமுக கூட்டணி ஒரு பக்கமும், திமுக, காங்கிரஸ் ஒரு பக்கமும் களத்தில் உள்ளன.
அதில் திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்பி வைத்திலிங்கம், மாநில தலைவர் சுப்பிரமணியன், திமுகவின் அமைப்பாளர்கள் சிவா, சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் கூட்டணி வென்றால் திமுகவுக்கு தான் முதலமைச்சர் பதவி தர வேண்டும் என்று அழுத்தம், திருத்தமாக திமுக முன் வைத்ததாக கூறப்படுகிறது. திமுகவின் இந்த கோரிக்கையால் ஜெர்க் ஆகி உள்ள காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு தகவலை போட்டு வைத்துள்ளது.
முதலமைச்சர் பதவி யாருக்கு என்பது குறித்து இப்போது முடிவெடுக்க வேண்டாம் என்றும், தேர்தல் முடிவுக்கு பின்னர் அதுபற்றி பேசிக் கொள்ளலாம் என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டமாக தெரிகிறது. இப்போதைக்கு இந்த பேச்சு அமுக்கி வாசிக்கப்பட்டது போன்று காணப்பட்டாலும் ஓயாது என்கின்றனர் விவரத் அறிந்தவர்கள்…!