என்ன வுட்ருங்க…! போலீசிடம் லெட்டர் தந்த மன்சூர் அலிகான்
சென்னை; த்ரிஷா விவகாரத்தில் ஜாலியாக பேசியதாகவும், வழக்கு விசாரணைக்காக எப்போது வேண்டுமானாலும் ஆஜர் ஆவதாக காவல்துறை விசாரணையின் போது நடிகர் மன்சூர் அலிகான் கூறி உள்ளார்.
வில்லன்களில் வித்தியாசமாகவும், காமெடி வில்லனாகவும் அறியப்படுபவர் மன்சூர் அலிகான். தலையை சிலுப்பி, சிலுப்பி அவர் வசனம் பேசுவதும், பேட்டி கொடுப்பதும் பார்க்கவே செம ஜாலியாக இருக்கும்.
அப்படிப்பட்ட அவர் அண்மையில் நடிகை த்ரிஷா குறித்து அவதூறு கருத்து கூறினார். மன்சூரின் குண்டக்க, மண்டக்க பேச்சு பெரும் விவாதமானது, அதே நேரம் விவகாரமாகவும் மாறி போனது. பெண்ணியம் பேசுபவர்கள் ஓரணியில் திரண்டு மன்சூரை வறுத்தெடுத்தனர். அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
விசாரணக்கு ஆஜராகுமாறு மன்சூருக்கு போலீசார் நேரில் சம்மன் அனுப்பினர். இந் நிலையில், அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. முன்ஜாமீன் மனுவில் காவல்நிலையத்தின் பெயரை தவறாக குறிப்பிட்டு இருந்தார். அதை பிறகு மாற்றி புது மனுவை தாக்கல் செய்தார்.
அவரின் செயலை கண்டு கோபம் அடைந்த நீதிபதி, நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல என்று எச்சரித்து மனு மீதான விசாரணையை நாளை ஒத்தி வைத்தார்.
இதனிடையே சென்னை ஆயிரம் விளக்கு பகுதி காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது மன்சூர் அலிகான் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது;
அந்த வீடியோவில் பேசியது நான் தான். நான் ஜாலியாக பேட்டி கொடுத்தேன்; த்ரிஷா அதனை தவறாக புரிந்து கொண்டார். எந்த உள் அர்த்தமும் வைத்து நான் பேசவில்லை.
நான் பேசியதற்கு த்ரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால், அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்.
நான் குரல் பிரச்னைக்காக நாளை தான் வருவதாக இருந்தேன். ஆனால், சமூக வலைதளங்களில் நான் தலைமறைவு, என்று என்னைப் பற்றி தவறாக வதந்தி பரவியதால் தற்போது ஆஜர் ஆனேன்.
இந்த வழக்கு விசாரணைக்காக எப்போது அழைத்தாலும் நான் வர தயாராக உள்ளேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.