Sunday, May 04 12:14 pm

Breaking News

Trending News :

no image

என்னது..? பிஎஸ்பிபி ராஜகோபாலன் திமுக முக்கிய புள்ளியின் உறவினரா…?


சென்னை: பிஎஸ்பிபி ஆசிரியர் ராஜகோபாலன், திமுக முக்கிய பிரமுகரான ஆர்எஸ் பாரதியின் உறவினர் என்று சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்பட்டு வருவதாக சென்னை கமிஷனரிடம் புகார் தரப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் விவகாரத்தில் நாள்தோறும் புதுசு, புதுசாக பல விவரங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதில் எது உண்மை, எது புரளி என்று ஒரு பக்கம் போலீசார் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந் நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் திமுக வழக்கறிஞர்கள் பிரிவைச் சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டான் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு அதன்மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து அவரைபோக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

குறிப்பாக நாராயணன் சேஷாத்திரி என்பவர், கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் என்ற ஆசிரியர், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு உறவினர் என்றும், அதனால் இந்த வழக்கை மூடி மறைத்து விடுவார்கள் என்றும், பொதுவெளியில் ஒரு சமூக வலைதளத்தில் (Face Book) தன்னுடைய கூற்றுக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல், தான் கூறுவது பொய் என்று உணர்ந்தோ அல்லது அதன் உண்மை குறித்து ஆராயாமலோ தன்னுடைய சித்தாந்தத்திற்கு எதிர்க்கருத்து கொண்டவர் என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பெயரைக் கெடுக்கும் எண்ணத்தோடு இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து மேலும் பலரும் இதைப் பதிவிட்டு வருவதால் இந்த அவதூறு பல தரப்பட்டவர்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என்பதும் பொய். அதேபோல் அப்படி அவர் உறவினர் என்பதால் தமிழக அரசு இந்த வழக்கை மூடி மறைக்கும் என்பதும் அவர் மீது நடவடிக்கை எடுக்காது என்பதும் கீழ்த்தரமான அவதூறு  என்பதோடு அல்லாமல் ஆட்சியின் மீதும் எங்கள் கட்சியின் மீதும் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டு மற்றும் மக்களிடையே கட்சி மற்றும் ஆட்சியாளர்கள் மேல் அவநம்பிக்கையை உருவாக்க கையாளப்படும் உத்தி.

எனவே, மேற்கூறிய நாராயணன் சேஷாத்திரி மற்றும் அதைப் பின்பற்றி சமூக வலைதளங்களில் மீள் பதிவு செய்தோர்மீது உடனடி நடவடிக்கை எடுத்து இந்தப் பதிவுகளை நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular