ஹலோ..! சூப்பர் ஸ்டார் வீட்டுக்கு வெடிகுண்டு வச்சுருக்கேன்.. மிரட்டல் போன்.. பதறிய போலீஸ்
மும்பை: மும்பையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக தொலைபேசி அழைப்பால் மும்பை போலீசார் மிரண்டு போயினர்.
சுதந்திர தின விழா, கணபதி விழா ஆகியவற்றை முன்னிட்டு மும்பை நகரில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
இந் நிலையில் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம், தாதர் பைகுலா ரயில் நிலையம், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
விரைவில் இந்த 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி மர்ம நபர் போனை வைத்துவிட்டதால் மும்பை காவல்துறையே மிரண்டு போனது. உடனடியாக அலர்ட் ஆன மும்பை போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிர சோதனையில் இறங்கினர். கிட்டத்தட்ட பல மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அங்கு எதுவும் வெடிகுண்டு கைப்பற்றப்படவில்லை. அமிதாப் பச்சனின் 4 பங்களாக்களிலும் கடும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை. 2 பேரை பிடித்து உள்ளோம். தொடர் கண்காணிப்பில் இருப்பதாக மும்பை காவல்துறையினர் கூறி உள்ளனர். தொலைபேசி அழைப்பு புரளி என்ற போதிலும், கண்காணிப்பில் இருக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.