ஆம்புலன்சும், அமைச்சர் அன்பில் மகேசும்..! வெளியான புதிய உண்மை
சென்னை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது என்ற செய்தியின் பின்னணியில் உள்ள காரணங்கள் இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
காலை முதலே ஊடகங்களில் ஒரு வீடியோ தாறுமாறாக வலம் வந்து மக்கள் மத்தியிலும் திமுகவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் மத்தியிலும் பெரும் விவாதத்தை உண்டு பண்ணியது.
கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டெல்டா பகுதிகளில் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஆய்வுக்காக வந்தார். அவரது வாகனம், அரசு அதிகாரிகள் வாகனம், கட்சியினர் வாகனம் என நீண்ட அணிவகுப்பில் வாகனங்கள் வந்து கொண்டிருந்தது.
அமைச்சர் கார் வந்த பாலத்தின் மறுபக்கம் ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லாமல் நீண்ட நேரம் காத்திருந்தது. அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரின் கார்கள் சென்ற பிறகே ஆம்புலன்சுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
சைரன் ஒலியுடன் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருக்க.. அமைச்சர் வாகனம் ஆமபுலன்சுக்கு வழிவிட வில்லை என்று ஒரு தகவல் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதை வழக்கம் போல் திமுகவின் எதிர்க்கட்சிகள் கெட்டியாக பிடித்துக் கொண்டு அரசியல் செய்து கொண்டு இருக்க… இதன் ஒட்டுமொத்த பின்னணியையும் ஊர்மக்கள் தெளிவாக விளக்கி உள்ளனர்.
அவர்கள் கூறி இருப்பதாவது: அணைக்கரை பாலம் என்பது ஒருவழிப்பாதை. அதாவது கார், பேருந்து போன்று பெரிய வாகனம் ஒன்று சென்றால் அதன் எதிர்புறத்தில் ஒரு சைக்கிள் கூட செல்லமுடியாது. பாலத்தின் அகலம் அவ்வளவுதான்.
இந்த பாலத்தின் நீளம் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர். பாலத்தின் ஒருபுறம் ஏதேனும் ஒரு வாகனம் வந்தால்… மறுபுறம் பாலத்தில் வாகனங்கள் நிறுத்தப்படும். ஒரு புறத்தில் இருந்து குறிப்பிட்ட வாகனங்களை அனுப்பிய பிறகு எதிர்புறம் இருந்து மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
இப்படி ஒரு நடைமுறை உண்டு. அதற்காக பாலத்தின் இரு முனைகளிலும் காவல்துறையினர் கையில் வாக்கி டாக்கியுடன் எப்போதும் நின்று கொண்டு இருப்பார்கள்.
அமைச்சர்கள், அதிகாரிகள் வாகனங்கள் பாலத்தின் பாதி தூரம் வந்த போது தான் எதிர்புறம் ஆம்புலன்ஸ் வாகனம் வந்திருக்கிறது. அதனால் அமைச்சர் வாகனத்தை எங்கும் நிறுத்தவோ, வழிவிடவோ அல்லது ரிவர்சில் இயக்கவோ முடியாது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆம்புலன்ஸ் மட்டுமல்ல… ஒரு சைக்கிளுக்கு கூட வழிவிட முடியாது. இது கும்பகோணத்தில் உள்ள அனைவருக்கும் நன்றாகவே தெரியும். எனவே அமைச்சர் ஆம்புலன்சுக்கு வழிவிட வில்லை என்று கூறுவது அபத்தமானது என்று கூறி உள்ளனர்.
இந்த விளக்கத்தில் இன்னும் ஒரு படி மேலே பலரும் காட்டமாக பதில் அளித்துள்ளனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை வைத்து புதியதாக சகல சவுகரியங்களுடன் பாலம் ஒன்றை கட்டிக் கொள்ள வேண்டியது தானே என்றும் கேள்வி எழுப்பி அசால்ட் காட்டி இருக்கின்றனர்.