இவர் தான் தமிழக பாஜகவின் புதிய தலைவரா…? ‘லீக்’கான தகவல்…!
சென்னை: எல் முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ள நிலையில் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பதற்கான ரேஸ் அக்கட்சியில் ஆரம்பித்து இருக்கிறது.
மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. புதியதாக 43 பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இடம்பிடித்துள்ளார்.
எப்படி? என்ன? பலரும் சொந்த கட்சியினரே மண்டையை ஒரு பக்கம் பிய்த்து கொண்டிருக்க அடுத்த தமிழக பாஜக தலைவர் யார் என்பதற்காக பந்தயம் பாஜகவில் ஆரம்பித்திருக்கிறது.
இது குறித்து பாஜக வட்டாரங்களில் இருந்து பல்வேறு தகவல்கள் கசியவிடப்பட்டு வருகின்றன. தமிழக பாஜகவின் தற்போதுள்ள நிலவரப்படி, 4 பெயர்கள் முதல் கட்ட பட்டியலில் இருக்கிறது. அவர்களில் இப்பவும் முதலாவதாக வந்து இருப்பவர் அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஹெச் ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் இருக்கின்றனர்.
ஹெச் ராஜாவின் மீதான சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் என்பது எண்ணிலடங்காதவை. ஆகவே பெயர் இந்த லிஸ்டில் இல்லை என்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக இருப்பவர் வானதி சீனிவாசன். ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் ரேசில் தீவிரமாக இருந்தார். ஆனால் அவருக்கு தேசிய மகளிரணி தலைவர் பதவி தரப்பட்டது. இப்போது எம்எல்ஏவாக இருக்கிறார். தமிழிசைக்கு தந்துவிட்டதால் மீண்டும் பெண் பிரதிநிதித்துவம் தரப்படுமா என்று தெரியவில்லை.
சரி… துடிப்பாக அறிவு பெட்டகமான ஒருவரை நியமிக்கலாம் என்றால் அதில் அண்ணாமலை பெயர் வந்து விழுகிறது. ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்எல்ஏ தேர்தலில் நின்றார்… தோற்றார். இப்போது துணை தலைவராக உள்ளார். அவருக்கு மீண்டும் புரமோஷன் கொடுத்து தலைவர் ஆக்க வேண்டுமா என்று கேள்வி எழுந்திருக்கிறதாம். கட்சிக்கு புதியவர் என்ற சர்ச்சையும் எழுந்துவிடும் என்று தகவல்கள் உலா வருகின்றன.
அடுத்த பெயராக முன் வைக்கப்படுவது நயினார் நாகேந்திரன். தமிழக பாஜக எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர். வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே வேட்பு மனு தாக்கல் செய்து கலக்கியவர். அவருக்கு வாய்ப்பு என்றால் மாற்று கட்சியில் இருந்து வந்தவருக்கு எப்படி என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.
இவர்கள் தவிர பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோரும் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு குறி வைத்திருப்பதாகவும் தகவல்களும் வெளியாகி உள்ளன. ஆனால் தேசிய பாஜக தலைமையின் பார்வை இவர்கள் மீது படுமா என்று தெரியவில்லை.
4 எம்எல்ஏக்கள் உள்ளதால் தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதில் அதீத கவனத்துடன் இருக்க வேண்டும் என்று டெல்லி தலைமை நினைக்கிறதாம். ஆகையால் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டே புதிய பாஜக தலைவர் நியமனம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அனேகமாக, வானதி சீனிவாசனுக்கு தலைவர் பதவியை அளிக்கலாம் என்பதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக கமலாலயம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.