தமிழக மக்களே… ஜாக்கிரதை…! மத்திய அரசு போட்ட லெட்டர்
சென்னை: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதால் அலர்ட்டாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஆண்டுகள் கடந்தாலும் கொரோனாவின் தாக்குதல் இன்னமும் மாறவே இல்லை. லட்சக்கணக்கானோரை பலி கொண்ட கொரோனாவில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. மக்களும் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் இலகுவாக்கப்பட்டன.
ஆனால் கடந்த 2 நாட்களாக நாட்டில் கொரோனா தொற்று ஏறுமுகத்தில் இருக்கும் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக, நேற்று முன்தினம் ஒரே நாள் தான், கிட்டத்தட்ட கொரோனா தொற்று 618 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்றைய தினம் காலை 8 மணி வரை பதிவான தகவல்களின் படி, புதியதாக 754 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.
தமிழகம் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் தொற்றுகள் அதிகரித்துள்ளன. இதை அனைத்தையும் அறிந்துள்ள மத்திய அரசு உடனடியாக மாநிலங்களை உஷார்படுத்தி உள்ளது.
பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி கேட்டுக் கொண்டு இருக்கிறது. தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்க தொடங்கி உள்ளது. அரசியல் நிகழ்வுகள், பொது இடங்களில் கூடுவோர் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
கடந்த நாட்களில் H3N2 இன்புளுயன்சா தொற்றால் 2800 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே சுகாதார தடுப்பு வழிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று மக்களை அரசு நிர்வாகம் கேட்டுக் கொண்டு உள்ளது.