Sunday, May 04 12:03 pm

Breaking News

Trending News :

no image

ஈபிஎஸ்சுக்கு டார்கெட்…? ‘அந்த’ மேட்டரை கையில் எடுத்த ஓபிஎஸ் டீம்…!


சென்னை: பொது செயலாளர் பதவியை நோக்கி ஸ்டிராங்காக நகர்ந்து வரும் ஈபிஎஸ்சுக்கு, ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கையில் எடுத்துள்ள விஷயம் தான் இப்போது அரசியல் டாபிக்.

தமிழக அரசியலில் மிக முக்கிய நாளாக பார்க்கப்படுவது வரும் 11ம் தேதி. அன்று தான் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்துக்கு விடை கிடைக்க போகிறது என்பது தான் காரணம். தினசரி அதிமுக பொதுக்குழு விவகாரம் பற்றி அனைத்து அரசியல் புள்ளிகளும் தங்களுக்குள் விவாதித்து வரும் தருணத்தில் வேறு ஒரு முக்கிய விஷயத்தை கையில் எடுத்து இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு.

வேறு ஒன்றும் இல்லை… கொடநாடு, கொலை மற்றும் கொள்ளை வழக்கு தான் அது. தமிழகம் மட்டுமல்ல இந்திய அரசியலையும் எதிர்பார்க்க வைத்துள்ள கொடநாடு விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஓபிஎஸ் தரப்பும், அவர்களது ஆதரவாளர்களும் காய் நகர்த்தி வருகின்றனர்.

குறிப்பாக கொடநாடு விஷயத்தில் ஈபிஎஸ் மீது நேராக புகார் கூறாத பலரும் இப்போது அதை பற்றியே பேசி வருவது கவனிக்கப்பட வேண்டியதாக மாறிவிட்டது. ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், என்ற பட்டியலில் தற்போது துணை பொது செயலாளர் வைத்திலிங்கம் இணைந்திருக்கிறார்.

கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும், எங்களை வளர்த்த அம்மா வீட்டில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அதிமுக தொண்டனின் மனநிலை என்று கூறி இருக்கிறார்.

தொடரும் இதுபோன்ற அதிரடிகளுக்கு இடையே ஓபிஎஸ்சின் மற்றொரு ஆதரவாளரான கோவை செல்வராஜ் ஒரு படி மேலே போய், தராதரம் தெரியாதவர், சர்க்கஸ் கோமாளி என்று வார்த்தைகளால் விளையாடி இருக்கிறார். தொடர்ந்து ஏதாவது பேசினால் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று அவர் சொல்லி வைக்க, அதிமுகவில் பெரும் சலசலப்பை உண்டு பண்ணி இருக்கிறது.

ஈபிஎஸ் மட்டுமல்ல… அவர்களின் ஆதரவாளர்களுக்கும் நெருக்கடி தரப்படுவதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்கின்றனர்  அதிமுக மீது அக்கறை கொண்ட அரசியல் விமர்சகர்கள். அதில் முதலில் அவர்கள் டிக் அடிப்பது வடவள்ளி சந்திரசேகரை தான். எஸ்பி வேலுமணி கண்ணால் பார்ப்பதை கனக்கச்சிதமாக முடிக்கும் திறமை கொண்ட இவரின் வீடு, தந்தை வீடு என 6 இடங்கள் இன்று வருமானவரி சோதனைக்கு ஆளாகி இருக்கின்றன.

அடுத்தடுத்து மாறும் இத்தகைய அரசியல் காட்சிகளை மையப்படுத்தும் அரசியல் பார்வையாளர்கள், ஈபிஎஸ்சுக்கு எதிராக ஓபிஎஸ் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை என்கின்றனர். அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாது என்று கூறும் அவர்கள், வரும் 11ம் தேதிக்குள் மேலும் பல முக்கிய விஷயங்கள் நடக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்…!

Most Popular