தளபதி விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் தளபதி ஸ்டாலின்…..!
திண்டுக்கல்: நடிகர் விஜய்யின் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் திமுகவினரிடையே கடுப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினர் இடையே புகழ்பெற்று விளங்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். அவரின் பிறந்த நாள் வரும் 22ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் அவர் பிறந்த நாள் கொண்டாடுவரா என்பது தெரியவில்லை.
ஆனால், விஜய்யின் ரசிகர்கள் இந்த முறை கலக்கலாக பிறந்த நாளை கொண்டாடுவது என்பதில் தீர்மானமாக உள்ளனர். அவர்களில் திண்டுக்கல் மாவட்ட விஜய் ரசிகர்கள் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்து அசத்தி உள்ளனர்.
நடிகர் விஜய்யை வாழ்த்தி அவர்கள் ஒட்டியுள்ள பிறந்த நாள் போஸ்டர் தான் அதற்கு காரணம். இந்த பிறந்த நாள் போஸ்டர் அரசியலிலும் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, தம்பி வா தலைமை ஏற்க என்று தளபதி ஸ்டாலின்,தளபதி நடிகர் விஜய்யை செங்கோல் கொடுத்து அழைப்பதாக போஸ்டர் அடிக்கப்பட்டு ஒட்டப்பட்டு உள்ளது.
அந்த போஸ்டரில் உள் சிறப்பு என்ன என்றால், போஸ்டரின் பின்னணியில் தலைமை செயலகம் படம் பட்டாசாக இடம்பெற்று இருக்கிறது. இந்த போஸ்டரை அடித்துள்ள திண்டுக்கல் மணிக்கூண்டு இளைஞரணி விஜய் மக்கள் இயக்கம் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நடிகர் விஜய்க்கான பிறந்த நாள் போஸ்டர் என்றாலும், தலைமை ஏற்க வா தம்பி என்று விஜய்யை ஸ்டாலின் அழைப்பதாக உள்ளதை எப்படி ஏற்றுக் கொள்வது என்பது திமுகவினர் கடுப்பில் உள்ளனர். வேண்டும் என்றே இப்படி ஏதாவது செய்கின்றனரா என்றும் அவர்கள் நடிகர் விஜய் ரசிகர்கள் மீது கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.