இங்க வாங்க நான் பாத்துக்கிறேன்… அமமுகவுக்கு எதிராக காய் நகர்த்தும் திமுக அமைச்சர்
சென்னை: அமமுக முக்கிய புள்ளிகள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் படு நெருக்கத்தில் உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.
சட்டசபை தேர்தலில் அமமுகவின் படுதோல்வி அக்கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம். கட்சிக்குள் இப்போது யார் இருக்கிறார்கள், யார் இல்லை என்ற கதிக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கடும் அதிருப்தியான மனநிலையில் உள்ளனர் என்பதை கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிகழ்வுகள் நமக்கு சொல்கின்றன.
அதற்கான ஒரு முக்கிய நிகழ்வை சொல்லலாம். ஜூன் 25ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டு அமமுகவில் இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மாரியப்பன் கென்னடி, குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரும் செந்தில்பாலாஜியின் முயற்சியில் திமுகவில் ஐக்கியமாகினர்.
அமமுகவுக்கு எதிரான இந்த படையெடுப்பு இத்தோடு நிக்காதாம்… இனியும் தொடரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அமமுகவில் இருந்த போது டிடிவி தினகரனுடன் படு நெருக்கமாக இருந்த அவர் படக்கென்று திமுகவில் இணைந்தார். இப்போது மின்சாரத்துறை அமைச்சர் என்ற வலுவான பதவியில் அமர்ந்திருக்கிறார்.
அடுத்து அனைவரின் இலக்காக இருப்பது உள்ளாட்சி தேர்தல் தான். அதனால் கடந்தகாலங்களில் டிடிவியை பலமாக ஆதரித்த அமமுகவின் முக்கிய நிர்வாகிகள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பேசுகிறாராம் செந்தில் பாலாஜி..
அவர்களிடம் பேசும் செந்தில் பாலாஜி, உங்களின் கஷ்டம் எனக்கு புரிகிறது. அதிமுகவுக்கு இப்போ போறது அவ்வளவு சரியில்லை… நான் இருக்கேன்… திமுகவுக்கு வாங்க, பாத்துக்கலாம் என்று ஆறுதலாக பேசி வருகிறாராம்.
செந்தில் பாலாஜியின் நம்பிக்கை தெறிக்கும் வார்த்தைகளை நம்பித்தான் அமமுகவின் முக்கிய புள்ளிகள் திமுக கரை பக்கம் ஒதுங்கி இருக்கின்றனர். இன்னும் பல முக்கிய நிர்வாகிகள் திமுகவில் விரைவில் தங்களை இணைத்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டு அமமுகவில் இருக்கும் முன்னாள் எம்எல்ஏக்களை செந்தில் பாலாஜி தொடர்பு கொண்டு இருக்கிறாராம். அதன்பின்னர் தான் சசிகலா சம்பந்தப்பட்ட சிலரின் லைனில் போய் இருக்கிறராம். அவர்களும் சசிகலா சொன்னதற்கு சரிங்கம்மா…சரிங்கம்மா என்று மட்டும் தான் சொல்லி இருக்கிறார்களாம். உறுதியான முடிவை கூறவில்லையாம்.
அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் மனபோக்கை அறிந்த மாவட்ட செயலாளர்கள் பலரும் இதை ஆதரிக்கிறார்களாம். சட்டசபை தேர்தல் தோல்வி… அடுத்து உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது… அவர்கள் என்ன செய்வார்கள்? டிடிவி தினகரனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால் இப்படி காய் நகர்த்தி அதிமுகவையும், அமமுகவையும் காலி செய்யும் பிளானில் திமுக இறங்கியிருப்பது தான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.