படு ‘ஸ்பீடில்’ ஸ்டாலின்…! ஆர்.எஸ் பாரதிக்கு போன சிக்னல்…! அதிமுக ‘ஜெர்க்’…!
சென்னை: முந்தைய அதிமுக அரசில் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை தோண்டி எடுக்கும் பணியை ஸ்பீடாக்குமாறு ஆர்எஸ் பாரதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சிக்னல் கொடுத்துள்ளதாக பரபர தகவல் வெளியாகி இருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முந்தைய அதிமுக ஆட்சியில் உள்ள பல்வேறு அமைச்சர்கள் மீதான ஊழல் முறைகேடுகள் பற்றி விசாரிக்கப்படும்.. அதற்காக தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் கூறி இருந்தார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இந்த வாக்குறுதியை அவர் பலமாக முன்னெடுத்து சென்றார்.
இப்போது அரியணையில் திமுக ஜம்மென்று உட்கார்ந்து… கொரோனா பரவல் தடுப்பு பணியை கையாண்டது. தொற்று பாதிப்புகள் எதிர்பார்த்ததை போன்று குறைந்து வருகிறது. அதை தொடர்ந்து ஆட்சியின் அடுத்தக்கட்ட பணிகளில் திமுக அரசு வேகமாக நகர ஆரம்பித்து இருக்கிறது.
முதல் கட்டமாக அதிமுக, அமமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்களை முகாம் மாற்றும் பணிகள் ஒரு பக்கம் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. அதற்கேற்ப அதிகாரிகள் மாற்றமும் நடந்து வந்தது.
ஆட்சியில் அமர்ந்து முழுதாக 2 மாதங்கள் கடந்த நிலையில் தேர்தல் வாக்குறுதியான தனி நீதிமன்றம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற திமுக தயாராகி வருவதாக கூறுகின்றனர் திமுக முக்கிய பிரமுகர்கள்.
அதற்காக தற்போதுள்ள அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதிக்கு முக்கிய அசைன்மெண்ட் ஒன்று திமுக தலைமை தரப்பில் இருந்து அளிக்கப்பட்டு உள்ளதாம். அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் புகார்களை… கையில் எடுக்குமாறு கூறப்பட்டு இருக்கிறதாம்.
அதன்படி ஊழல் புகார்களை அக்குவேறு, ஆணிவேராக பிரித்தெடுத்து வழக்குகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆர்எஸ் பாரதி முழுமையாக களம் இறங்க உள்ளார். எக்காரணம் கொண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எஸ்கேப் ஆகிவிடக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டு உள்ளதாம்.
கட்சி தலைமையின் இந்த கூற்றுக்கு கட்டியம் கூறுவது போன்று வேறு ஒரு முக்கிய நிர்வாகியின் நியமனத்தையும் விவரம் அறிந்தவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதாவது, ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரிய அன்பகம் கலை திமுக சட்டப்பிரிவின் துணை அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆர்எஸ் பாரதியின் கட்சி பணிகள் தொடர்பான சுமையை குறைக்கவும், ஊழல் புகார்களை வேகப்படுத்தவும் அன்பகம் கலை நியமனம் நடந்து இருப்பதாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறி வருகின்றனர். அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு இனி அடுத்து வரக்கூடிய காலங்கள் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும்.. அதில் சந்தேகம் இல்லை என்றும் கூறுகின்றனர் திமுக முக்கிய நிர்வாகிகள்…!