அடேங்கப்பா….! ஒரே குடும்பத்தில் 1,200 ஓட்டுகள்…! படையெடுக்கும் அரசியல் கட்சிகள்…!
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 1200 ஓட்டுகள் இருப்பதால் அரசியல் கட்சிகள் அந்த குடும்பத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அசாமில் சட்டசபை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடக்கிறது. இதையடுத்து நாளையுடன் அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்கிறது. பிரச்சாரங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், தேர்தல் களத்தில் சில சுவையான சம்பவங்களும் நடந்து வருகின்றன.
அசாமின் சோனிட்பூர் மாவட்டம் போலோகுரியில் நேபாளி காவ்ன் என்ற இனமக்கள் வசிக்கின்றனர். 300 குடும்பங்களை சேர்ந்த 2,500 பேர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். கிராமத்தை சேர்ந்த மறைந்த ரான் பகதூர் தாபா என்பவருக்கு 12 மகன்களும், 10 மகள்களும், 150 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
அவரது குடும்பத்தில் மட்டும் 1,200க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. லட்டு கணக்காய் ஒரே குடும்பத்தில் இத்தனை வாக்குகள் இருப்பதை அறிந்த அரசியல் கட்சியினர் ரங்கபாரா தொகுதியில் உள்ள தாபா வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். இது குறித்து நேபாளி காவ்ன் கிராமத் தலைவர் சார்கி தாபா கூறியதாவது:
1997ம் ஆண்டின் என்து தந்தைக்கு 116 வயதில் காலமானார். பின்னர் 1906ம் ஆண்டில் நேபாளத்திலிருந்து அசாம் மாநிலத்துக்கு எங்கள் மூதாதையர் குடி பெயர்ந்தனர். எனது தந்தைக்கு 5 மனைவிகள் இருந்தனர். அவர்களுக்கு 12 மகன்களும், 10 பெண் குழந்தைகளும் பிறந்தன.
அவரது பேரன்கள் மற்றும் கொள்ளுப் பேரன்கள் என 2500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளோம். எங்கள் குடும்பத்தை சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட வாக்குகளும் உள்ளன. வரும் 27ம் தேதி நடக்கும் முதல்கட்ட தேர்தலில் எங்கள் குடும்பத்தினர் வாக்களிப்பர் என்று கூறினார்.