3 நாளில் 200 பேர் பலி…! 'கதறும்' குளிர்தேசம்…! காரணம் என்ன..?
ஒட்டாவா: கனடாவில் 3 நாட்களில் வீசிய கடும் வெப்ப அலையில் 200க்கும் மேற்பட்டோர் பலியானது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
குளிர் நாடுகளில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற நாடு கனடா. இங்குள்ள மக்களுக்கு இப்போது பெரும் சோதனை நடக்கிறது. கடந்த சில நாட்களாக அந்த நாட்டில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
வெப்ப அலை என்றால் ஏதோ சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். 49.1 டிகிரி செல்சியஸ் வெயில் போட்டு தாக்கி வருகிறதாம். அனலின் தாக்கம் தாங்க முடியாமல் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா, ஆல்பர்டா என பல மணடலங்களில் வரலாறு காணாத வெப்பம் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அடிக்கிற வெயில் தாங்க முடியாததால் அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.
கொரோனா தடுப்பூசி மையங்கள் பூட்டப்பட்டு உள்ளன. இந்த நாடு இதுவரை சந்திக்காத வெப்ப அலை கடந்த சில நாட்களாக பதிவாகி வருகிறது. இது இப்படியே தொடரும் என்பது தெரிவதால் அடுத்து வரக்கூடிய கால கட்டங்களில் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கனடா நாட்டு அரசாங்கம் தவிக்கிறது.
பருவநிலை மாற்றத்தின் விளைவே இது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். கனடா நாட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் ஏசி ரூம்களில் இருக்குமாறு அரசு அறிவுறுத்தி இருக்கிறது.