நைட் வேற… காலையில் வேற…! குழம்பிய பாஜக
சென்னை: எடப்பாடி உருவ படத்தை எரித்த பாஜக நிர்வாகி நேற்றிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டு இன்று காலை மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
தமிழக பாஜகவின் அண்ணாமலையின் தலைமையையும், அவரது செயல்பாடுகளையும் எதிர்த்து போர்க்கொடி தூக்கியவர்கள் மாற்று கட்சியில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுகவில் சேர்ந்து தமிழக பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். சிடிஆர் நிர்மல்குமார், திலீப் கண்ணன் என்று இந்த பட்டியல் நீள்கிறது.
கூட்டணியில் விரிசல் என்று பேச்சகள் எழுந்த நிலையில், கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பாஜகவின் எரித்து எதிர்ப்பை காட்டினர். இதனால் அதிமுகவினர், பாஜகவினர் இடையே புகைச்சல் எழுந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் உருவப்படத்தை எரித்த பாஜக இளைஞர் அணி தூத்துக்குடி மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் பிறப்பித்து இருந்தார்.
நேற்றிரவு நீக்க அறிவிப்பு வெளியான நிலையில் அதிகாலையில் சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழக பாஜக மாநில பொது செயலாளர் பொன் பாலகணபதி ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதில் தினேஷ் ரோடி தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவார் என்று கூறி உள்ளார்.
இரவு நீக்கம், காலையில் சேர்ப்பு என்பதை அறிந்த பாஜக தொண்டர்கள் சற்றே குழம்பி போய் இருக்கின்றனர். எதற்காக நீக்க அறிவிப்பு, பின்னர் சேர்ப்பு என ஏமாற்றத்தில் உள்ளனர்.