பஸ்சில் பொம்பளைங்களை முறைச்சா ஜெயில்…! அடி தூள் கிளப்பும் ரூல்ஸ்
சென்னை: பேருந்துகளில் பெண்களை ஆண்கள் முறைக்கவோ, சத்தம் போடவோ கூடாது எனறு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதன் மூலம் பேருந்தில் செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்ததோடு, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை தரும் திட்டமாக இது பார்க்கப்பட்டது.
ஆனால் களத்தில் நிலைமை வேறுமாதிரியாக தான் இருந்தது. இலவசமாக பேருந்துகளில் செல்லும் பெண் பயணிகளை ஆண் பயணிகள் வம்பு இழுப்பதாகவும், பிரச்னைகள் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த குற்றச்சாட்டுக்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்புகளை நடத்துநர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
பேருந்தில் பயணிக்கும் பெண்களை ஆண் பயணிகள் முறைத்து பார்க்க கூடாது.
அத்துமீறலில் ஈடுபட்டால் ஆண் பயணியை பேருந்தில் இருந்து இறக்கி விடலாம்.
கண்டக்டர் எச்சரிக்கையை மீறி செயல்படும் ஆண் பயணிகளை வழியில் அமைந்திருக்கும் காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம்.
கூச்சலிடுவது, கண் அடிப்பது, விசில் அடிப்பது, சைகை காட்டுவது, பாலியல் ரீதியாக புண்படுத்தும் வகையில் பேசுவது, பாடுவது, போட்டோ எடுப்பது போன்ற செயல்களை ஆண் பயணிகள் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.