39 தொகுதிகளில் யார் வெற்றி..? ‘ஷாக்’ தந்த சர்வே
தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும் யார் வெல்வார்கள் என்று கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது.
லோக்சபா 2024 தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தமிழகத்தில் வெப்பத்தையும் தாண்டி உக்கிரமாக உள்ளது. திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகள் முழு வீச்சில் இறங்கி மக்களை சந்தித்து வருகின்றன.
தேர்தலில் மக்களின் ஆதரவு தங்களுக்கே என்று அனைத்துக் கட்சிகளும் மார் தட்டிக் கொண்டு களத்தில் இறங்கி இருக்கின்றன. மக்கள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை அறிய, நாடு முழுவதும் இந்தியா டுடேவும், சி வோட்டரும் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளனர்.
அதில் கிடைத்த முடிவுகளை அந்நிறுவனம் இப்போது வெளியிட்டு உள்ளது. வட இந்தியாவில் ரிசல்ட் என்ன என்பது தெரிவதைவிட, தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் என்ன ரிசல்ட் என்பதுதான் அனைத்து தரப்பினருக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அதன்படி, 39 தொகுதிகளையும் திமுகவும், அதன் கூட்டணிக்கட்சிகளும் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அதிமுக, பாஜக கூட்டணிக்கு பூஜ்யம் என்றும் மக்களின் மனநிலை, திமுக கூட்டணிக்கு ஜே… என்று இருப்பதாகவும் அதில் அப்பட்டமாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மக்கள் மாற்று அரசியலை விரும்புகின்றனர் என்று கூறி வலம் கொண்டு இருந்த பாஜகவுக்கு இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் ஷாக் தந்திருப்பதாக தெரிய வருகிறது. அதிமுக தலைமையும் என்ன இது என்று குழம்பி போய் கிடப்பதாக கூறப்படுகிறது.
திமுக தரப்போ.. கருத்துக்கணிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் திமுக கூட்டணிக்கு கொண்டு சேர்க்கும் வேலைகளில் மிக கவனம் தேவை என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
என்ன இருந்தாலும்… மக்களே எஜமானர்கள் என்பதால்… இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் அப்படியே நடக்குமா? என்பது ரிசல்ட் வந்த பிறகே தெரியும். ஆனால், அரசியல் விமர்சகர்களோ… இந்த கருத்துக்கணிப்புகள் மக்களின் எண்ண ஓட்டங்களே என்பதால் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றவே வாய்ப்புகள் அதிகம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.