இதோ அடுத்த விக்கெட்… திமுகவுக்கு ஓட்டம் பிடிக்கும் அதிமுக முன்னாள் எம்பி…?
சென்னை: அதிமுக முன்னாள் எம்பி பரசுராமன் திமுகவில் விரைவில் இணைய இருப்பது, அதிமுக தலைமையை ஒட்டு மொத்தமாக அதிர வைத்துள்ளது.
10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதாக மக்கள் மத்தியில் பேச்சுகள் எழுந்து வண்ணம் உள்ளன. தொடக்கத்தில் இது வழக்கமான பல்லவி என்று எதிர்க்கட்சி தரப்பில் பேசப்பட்டாலும் இல்லை அது உண்மை தான் என்று ஒத்துக் கொள்ள வேண்டும் என்று அதே அதிமுக முகாமில் ஒருவர் பேசினால் எப்படி இருக்கும்.
இப்போது அப்படி தான் அதிமுக தலைமை முகாம் செமத்தியாக அதிர்ந்து போயிருக்கிறது. பின்னே…. கட்சியின் முன்னாள் எம்பி ஒருவர் திமுக மாவட்ட செயலாளரை தமது ஆதரவாளர்களுடன் சென்று கலைஞர் அறிவாலயத்தில் போய் சந்தித்து பேசியிருந்தால் ஷாக் வராதா என்ன..?
அதிமுக தலைமையை இப்படி ஒட்டு மொத்தமாக அதிர வைத்து இருப்பவர் முன்னாள் எம்பி பரசுராமன். 2014ம் ஆண்டு தேர்தலில் டிஆர் பாலுவை எம்பி தோற்கடித்த திமுக முகாமையும் திரும்பி பார்க்க வைத்தவர் இவர்.. இப்போது ஸ்டாலின் புகழ் பாட ஆரம்பித்துள்ளார்.
கடந்த 22ம் தேதி வீடியோ ஒன்றில் தமிழக அரசையும், திமுக தலைவர் ஸ்டாலினையும் வானளாவ புகழ்ந்து தள்ளினார். அப்பவே அதிமுக முகாமுக்கு லேசாக டவுட் வந்தபோதிலும் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை.
நேற்று திமுகவையும், தமிழக அரசையும் கண்டித்து அதிமுக நடத்திய போராட்டத்தில் பரசுராமன் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரனை கலைஞர் அறிவாலயத்தில் தமது ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்து பேசி உள்ள போட்டோ இப்போது வைரலாகி இருக்கிறது.
அதிமுகவில் இருந்து திமுகவில் இணைவது பற்றியும், ஸ்டாலினை சந்திப்பது குறித்தும் அவர் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழக முதல்வரை சந்திக்க அவர் நேரம் கேட்டுள்ளதாகவும் ஒரு தகவல் பரபரத்து கிடக்கிறது. பரசுராமனை சுற்றி நடக்கும் இந்த நிகழ்வுகளை பற்றி அதிமுக தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்துகள் முன் வைக்கப்படவில்லை.
ஆனாலும் இது உண்மைதான்.. பரசுராமன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாக உள்ளார் என்று டெல்டா மாவட்டங்களில் இருந்து தகவல்கள் உலா வந்து கொண்டு இருக்கின்றன. அதிமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்களின் இத்தகைய போக்கு அக்கட்சியின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.