Sunday, May 04 11:42 am

Breaking News

Trending News :

no image

திமுகவின் செல்லூர் ராஜூ ஆனாரா அமைச்சர் செந்தில் பாலாஜி…? கதறவிடும் நெட்டிசன்ஸ்


சென்னை: கரண்டு கட்டுக்கு அணில்தான் காரணம் என்று டுவிட்டர் பதிவை போட்ட மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை இணையவாசிகள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

திமுகவுக்கும், மின்சாரத்துக்கும் எப்போதும் ஆகவே ஆகாது… அடிக்கடி திமுகவுக்கு கரண்ட் ஷாக் வந்து கொண்டே இருக்கும். இம்முறை தேர்தலில் தோற்றால் அதற்கு மின்வெட்டே காரணம் என்று 2011ம் ஆண்டு அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி கூறியிருந்ததை யாரும் மறக்கமுடியாது. அந்த தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது தனிக்கதை.

இப்போது சமூக வலைதளங்களில் மின்வெட்டு குறித்து திமுகவை நெட்டிசன்ஸ் உண்டு, இல்லை என்று ஆக்கி வருகின்றனர். திமுக பதவியேற்று ஒரு மாதம் கடந்துவிட்ட நிலை இருந்தால் கூட கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பரவலாக கரண்ட் கட் ஆகி… அனைவரையும் எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த கரண்ட் கட் விவகாரம் சில நாட்களாக பூதாகரமாகி அணில் வரைக்கும் சென்றிருக்கிறது. அணிலுக்கும், கரண்ட் கட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள சில டுவிட்டர் பதிவுகளே காரணமாகி இருக்கின்றன. நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்தும், மீம்ஸ்களாலும் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

போதாகுறைக்குஅவரின் பதிவுகளை கண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் நகைப்பாக ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டார். அதற்கு பதிலடி தரும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தமது டுவிட்டர் பதிவில் சில கருத்துகளை கூறி இருக்கிறார்.

அவரின் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்பது மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை.

அவை மின் கம்பிகளில் உரசுகின்றன. அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும்கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதையும் ஒரு காரணமாகச் சொன்னேன்.

அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாகச் சித்திரிக்கும் டாக்டர் ராமதாஸ், தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்புப் பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்.

அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின் வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம். பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும்பொழுதும் மின் தடை ஏற்படுகிறது.

களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள். எந்தச் சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குப் பெரிதன்று. திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இவரது பதிவை டாக்டர் ராமதாஸ் ஏற்றுக் கொள்வாரோ என்பது தெரியவில்லை. நெட்டிசன்கள் இதற்கு இஷ்டம் போல கமெண்ட்களை போட்டு தாக்கி வருகின்றனர். சிலர் கடந்த அதிமுக ஆட்சியில் அனைவரின் காமெடிகளுக்கும் ஆளான முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை நினைவூட்டுகின்றனர்.

தண்ணீரில் தெர்மாகோல் விட்டது, வெங்காயம் விலை உயர்வுக்கு வித்தியாசமான காரணம் சொன்னது, எகிப்து வெங்காயத்தை ஈஜிபுத்து வெங்காயம் என்று கூறி செய்தியாளர்களிடம் காமெடி செய்தது என்பதை மீண்டும் ஞாபகப்படுத்தி அமைச்சர் செந்தில்பாலாஜியை தாளித்து எடுத்து வருகின்றனர்.

இன்னும் சிலரோ… திமுகவின் செல்லூர் ராஜூவாக இவர் இருக்கிறாரோ என்று கேட்டும் நகைச்சுவை சரவெடியை கொளுத்தி போடுகின்றனர். ஆக மொத்தத்தில் மின்சாரம் என்றாலே திமுகவுக்கு ஷாக் அடிக்கும் சமாச்சாரம் என்ற பேச்சுகளும் உலவ ஆரம்பித்துள்ளன.

Most Popular