ஸ்டாலினிடம் கண்ணீர்விட்டு கதறி, கதறி அழுத சீமான்…!
சிவகங்கை: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலவமைச்சர் ஸ்டாலினிடம் கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் தந்தை பெயர் செந்தமிழன். சிவகங்கை மாவட்டத்தில் வசித்து வந்த அவர் நேற்று காலமானார். இந்த தகவல் உடனடியாக சீமானுக்கு தெரிவிக்கப்பட்ட அவர் உடனடியாக சிவகங்கை புறப்பட்டார்.
வீட்டில் வைக்கப்பட்ட தமது தந்தையின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு சீமான் அழுதார். அப்போது அருகில் இருந்த ஒருவர் தமது போனை சீமானிடம் கொடுத்துவிட்டு முதல்வர் பேசுகிறார் என்கிறார். அவரிடம் அப்பாவின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
எதிர்பாராத இந்த தொலைபேசி அழைப்பை கண்டு ஒரு கணம் செய்வதறியாது திகைத்த சீமான், மடை திறந்த வெள்ளம் போல தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலினிடம் கண்ணீர் விட்டு அழுது துக்கத்தை பகிர்ந்து கொண்டார்.
அவரை ஆசுவாசப்படுத்தும் முதல்வர் ஸ்டாலினிடம், இந்த நேரத்தில் நீங்கள் துணையாக இருப்பது பெருமையாக இருப்பதாகவும், நம்பிக்கையை கொடுப்பதாகவும் சீமான் கூறி கண்ணீர் வடித்துள்ளார். அவரிடம் அப்பாவின் மறைவு எப்படி நடந்தது என்று கேட்டு தெரிந்து கொண்டு அதற்கான ஆறுதலையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தாம் போகும் இடங்களில் எல்லாம், பார்க்கும் செய்தியாளர்கள் சந்திப்புகளில் எல்லாம் திமுகவையும், கருணாநிதியையும், ஸ்டாலினையும் சீமான் விமர்சிக்காத நாளே இல்லை. அப்படிப்பட்ட நிலையிலும் சீமானிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசி துக்கம் விசாரித்து, இரங்கல் கூறியது நாகரிக அரசியலாகவும், மதிப்புமிக்க அரசியலாகவும் பார்க்கப்படுகிறது.