விஜயகாந்தை 'அழ' வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்…!
சென்னை: தமது உடல்நிலையை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அன்புடன் விசாரித்ததை கேட்ட விஜயகாந்த் தேம்பி, தேம்பி அழுதுள்ளதாக கூறப்படுகிறது.
தேமுதிக நிறுவனரும் தலைவருமான விஜயகாந்த் உடல்நலமில்லாமல் இருக்கிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அவரது கட்சி அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பு, நிதி நெருக்கடி, சரியான கூட்டணி அமையாதது என பல சறுக்கல்களை இந்த தேர்தலில் தேமுதிக சந்தித்தது.
தேர்தல் முடிந்து திமுக ஆட்சியில் அமர்ந்த தருணத்தில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அதன் பின்னர் அவரது மகனும், முதல்முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமது கூட்டணியில் இல்லாத விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அரசியல் அரங்கில் இந்த சந்திப்பு தனி முக்கியத்துவம் பெற்றது.
இந்த நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினை தேமுதிக துணை பொது செயலாளர் சுதிஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடந்துள்ளது
அப்போது அவர்களிடம் பேசிய ஸ்டாலின், விஜயகாந்தின் உடல்நிலை, பிரேமலதா ஆகியோர் பற்றி அதிக அக்கறையுடன் விசாரித்துள்ளார். கொரோனா தாக்கம் உச்சத்தில் இருப்பதால் அப்பாவை மிகுந்த கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்…. வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்னர் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றிய பிறகு அப்பாவை சென்று சந்தியுங்கள் என்று மகன் விஜயபிரபாகரனுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.
இது தவிர கருணாநிதிக்கும், விஜயகாந்துக்கும் இடையிலான நட்பு பற்றியும் பேச்சு எழுந்தது. அப்போது கருணாநிதி, விஜயகாந்தை விஜி என்று அன்புடன் அழைப்பதையும் பற்றியும் பேசி உள்ளனர். வீடு திரும்பிய பின்னர் இந்த சந்திப்பு குறித்து அப்பா விஜயகாந்திடம் கூறி உள்ளார் மகன் விஜயபிரபாரகன்.
அனைத்தும் கேட்டு தமது நினைவுகளை பகிர்ந்து கொண்ட விஜயகாந்த் ஒரு கட்டத்தில் தேம்பி, தேம்பி அழுததாக கூறப்படுகிறது. மனம்நெகிழ்ந்து அழுத விஜயகாந்தை நீண்ட நேரம் அவரது குடும்பத்தினர் சமாதானப்படுத்தி உள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தொண்டர்களும் கண்கலங்கி போயுள்ளனர். திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் இந்நேரம் நமது நிலைமை எங்கோ சென்றிருக்கும் என்றும் அவர்கள் பேசி வருகின்றனர்.