டுவிஸ்ட்.. பொதுத்தேர்வு ரத்தாகிறதா…? தீவிர பரிசீலனையில் பள்ளிக்கல்வித்துறை
சென்னை: 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துவிடலாமா? என்று யோசனையில் பள்ளிக்கல்வித்துறை உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு, தமிழகம் முழுவதும் மாநில பள்ளி கல்விக்கொள்கையை உருவாக்க கருத்துக் கேட்பு கூட்டங்களையும், ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட கல்வி அதிகாரிகள் தங்களது கருத்துகளை கூறினர். கட்டிடங்கள் கட்ட போதிய நிதியை பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கவில்லை என்று கூறப்பட்டது. மேலும் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், காலதாமதம் ஆவதால் ஆசிரியர் இல்லாத நிலை பள்ளிகளில் உருவாகுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட காரணங்கள் வரிசை கட்டி இருப்பதால் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் முழுமையாக நடத்த முடியாமல் இருப்பதாகவும், எனவே 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்வது குறித்து பேசப்பட்டு உள்ளது. ஆனால் இதுதொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி ஏதேனும் விவாதிக்கப்பட்டதா என்ற தகவல்கள் இல்லை.