Sorry கேக்குறீயா என்ன…? அமீருக்காக களமிறங்கிய பிரபல இயக்குநர்
சென்னை: அமீரின் பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்னையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பாரதி ராஜா வலியுறுத்தி இருக்கிறார்.
பல ஆண்டுகள் முன்பே வெளியாகி இன்றும் அனைத்து தரப்பினராலும் விரும்பி பார்க்கப்படும் படம் பருத்தி வீரன். நடிகர் கார்த்தியை அறிமுகப்படுத்தி, இயக்குநர் அமீர் எடுத்த இந்த படம் சூப்பர் ஹிட்டடித்தது.
படம் எப்போதோ வெளிவந்த நிலையில், தமது பணத்தை திருடிவிட்டதாக அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் மீது குற்றம்சாட்டி இருந்தார். அவரின் இந்த புகார் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, அமீருக்கு ஆதரவாக, சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்ட பலர் கருத்துகளை வெளியிட்டனர்.
இந் நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், இயக்குநர் பாரதிராஜா ஒரு அறிக்கை வெளியிட்டு ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
அவரின் அறிக்கை விவரம்;
திரு.ஞானவேல் அவர்களே, பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதார பிரச்சனை மட்டுமே, ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அமீர் உங்கள் படத்தில்தான் வேலை கற்றுக்கொண்டார் என்பதை எக்காளமாகக் கூறி வன்மமாக சிரிப்பது என் போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்.
ஏனென்றால், உண்மையான படைப்பாளிகள் சாகும்வரை கற்றுக்கொண்டே தான் இருப்பார்கள். மிகச்சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும், அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்னையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.