3 பேர்… அதுவும் சீனியர் அமைச்சர்கள்…! ஸ்டாலினை சுற்றும் புது சிக்கல்
சென்னை: மொத்தம் 3 சீனியர் அமைச்சர்கள் மீது ஸ்டாலின் கோபத்தில் உள்ளதாக திமுக முகாமில் பேச்சுகள் கிளம்பி இருக்கின்றன.
கட்சி என்றால் அதிருப்தியும், சர்ச்சைகளும் இருக்கத்தான் செய்யும். அதிலும் ஆளும்கட்சி என்றால் அமைச்சர்களை சுற்றியும் சர்ச்சைகள் இல்லாமல் இருப்பது கிடையாது. இப்படி எல்லாம் சர்ச்சை வரும் என்றுதான் அரியணை ஏறிய குறுகிய காலத்தில் தமது அமைச்சரவையை கூட்டி ஒரு கூட்டம் போட்டு இருந்தார் ஸ்டாலின்.
தவறு.. அது யார் செய்திருந்தாலும் நடவடிக்கை என்பதை அழுத்தம், திருத்தமாக கூறி இருந்தார். அவரின் எச்சரிக்கை+அட்வைசை ஏற்று அனைத்து அமைச்சர்களும் படு ஸ்பீடாக பணியாற்றி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள 9 மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பிசியாக உள்ளனர்.
ஆனால் இப்போது கடந்த சில நாட்களாக 3 சீனியர் அமைச்சர்கள் பற்றி தான் அறிவாலயம் முழுக்க பேச்சாக இருக்கிறதாம். இதில் முதலில் வருபவர் மூத்த அமைச்சர், கருணாநிதி காலத்து நபரான துரைமுருகன். அவருக்கு அடுத்து தா.மோ. அன்பரசன்.
யாராவது உள்ளாட்சி தேர்தலில் உள்குத்து பண்ணினால் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்துவிடுவேன் என்று கர்ஜித்து இருக்கிறார் துரைமுருகன். அவரை போன்று மதுராந்தகம் தொகுதிக்குள் உள்ள அனைத்த உள்ளாட்சி பதவிகளிலும் திமுக தான் ஜெயிக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் ஒன்றிய செயலாளர்கள் கழுத்தில் தலை இருக்காது என்று திணற அடித்திருக்கிறார்.
இப்போது 3வது வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மீது புகார் ஒன்று கிளம்பி வட்டம் அடித்து வருகிறது. படுகர் இன மக்களுக்கு மட்டும் அதிக முன்னுரிமை தந்து செயல்படுகிறார். மற்ற சமுதாய மற்றும் மத மக்களை கண்டு கொள்வதில்லை என்று சர்ச்சை கிளம்பி உள்ளது.
வேண்டிய மற்றும் படுகர் சமுதாய நபர் ஒருவரை உதவி வன பாதுகாவலர் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளனராம். அவரின் அதிகார எல்லைகள் அனைத்தும் அமைச்சரின் வீடு, சொத்துகள் இருக்கும் லிமிட்டுக்குள் வருகிறதாம்.
உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள சூழலில் இப்படிப்பட்ட சர்ச்சைகள் கட்சியினரை முணுமுணுக்க வைத்து இருக்கிறதாம்… எந்த தருணத்திலும் கட்சி, ஆட்சி என இரண்டிலும் சர்ச்சைகள் எழக்கூடாது என்ற திடமான முடிவில் இருக்கும் ஸ்டாலினுக்கு இது போன்ற செயல்பாடுகள் அதிருப்தியை அளித்து உள்ளதாம்… விரைவில் அவர் அனைத்தையும் சரி செய்துவிடுவார் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளது.