உங்க செலவு… உங்க கையில்…! கைவிரித்ததா திமுக தலைமை..?
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில், திமுக வேட்பாளர்களே தங்களின் தேர்தல் செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டும், கட்சி காசு கொடுக்காது என்ற தகவலால் அதிர்ந்து போயுள்ளனர் உடன்பிறப்புகள்.
எப்படியும் அரியணையை பிடித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் பம்பரமாக இறங்கி இருக்கிறது திமுக. 200 தொகுதிகளில் உதய சூரியன் நிச்சயம் போட்டி என்ற உற்சாகத்தில் இப்போது பலரும் வேட்பாளர்கள் ஆகிவிட்ட சந்தோஷத்தில் உள்ளனர்.
ஆனால் திமுக தலைமையிடம் இருந்து முக்கிய நிர்வாகிகளிடம் கூறப்பட்டுள்ள ஒரு விஷயம் ஒட்டு மொத்த உடன்பிறப்புகளையும் உலுக்கி இருக்கிறது. திமுக இம்முறை அதிக தொகுதிகளில் கட்டாயம் போட்டியிட உள்ளது. எப்படியும் எம்எல்ஏ சீட் பெற்று விடுவது இப்போது பலரும் அக்கட்சியில் முட்டி மோத ஆரம்பித்துள்ளனர்.
திமுகவின் தேர்தல் பணிகள் இப்படி ஒரு பக்கம் இருக்க, யார் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுகிறார்களோ, அவர்களே அவர்களின் தேர்தல் செலவுகளை செய்து கொள்ள வேண்டும் என்று தலைமை கூறியிருக்கிறதாம். கட்சியின் நிதி நிலைமை படு சிக்கலாக உள்ளது.
கடந்த எம்பி தேர்தலில் வேட்பாளர்கள் பலருக்கு, கட்சி நிதி கொடுத்து உதவ முடியாமல் போனது, இப்போதும் நிலைமை அப்படியே உள்ளது. திமுகவுக்கு நிதி வரும் வழிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்தி வருகிறது. எனவே இந்த முறை தலைமை தொகுதி செலவுகளுக்கு பணம் கொடுக்காது.
வேட்பாளர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த நிர்வாகிகளிடம் ஸ்டாலின் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அவரின் இந்த பேச்சை கண்டு முன்னணி நிர்வாகிகள் அதிர்ந்து கிடக்கின்றனர்.
எப்படி பணம் செலவு செய்வது… ஏற்கனவே கொரோனா எல்லா தொழிலையும் படுக்க வைத்துவிட்டது. பணப்புழக்கமும் இல்லை, நிலைமை இன்னமும் சீராகவில்லை, ஒட்டுமொத்த செலவும் வேட்பாளர் செய்வது என்றால் எப்படி? என்று இப்போது பலரும் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனராம்.
ஆகையால் அவர்களில் வேட்பாளர் கனவில் இருந்த பலரும் இப்போது சீட் வேண்டும் என்று பின்வாங்கும் முடிவில் இருக்கின்றனராம். தலைமையை எதிர்பார்க்க வேண்டாம்.. நீங்களே செய்து கொள்ள வேண்டும் என்றால் எப்படி? கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக மாநிலத்தில் கட்சி ஆட்சியில் இல்லை, மத்தியிலும் நிலைமை அப்படித்தான் உள்ளது. பின்னர் வரவு எங்கிருந்து வரும் என்று ஆற்றாமையுடன் உள்ளனராம் உடன்பிறப்புகள்…!
எப்படியும் வெற்றி நமக்கு தான் ஸ்டாலினும், திமுக தலைமையும் அசால்ட்டாக இருந்தால்… அவ்வளவுதான் முயல், ஆமை கதையாகி விடும் என்று எச்சரிக்கின்றனர் திமுகவின் மூத்த நிர்வாகிகள்.