தமிழக அரசு டிஸ்மிஸ்சா…? பாஜக முக்கிய பிரமுகர் அதிரி புதிரி
சென்னை: தமிழக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று பாஜக முக்கிய பிரமுகரான ஹெச் ராஜா வெளியிட்டுள்ள பதிவு அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஹெச் ராஜா. அதிரி புதிரியாக பேட்டி கொடுப்பதிலும், கேட்ட கேள்விக்கு வேறு ஒரு பதில் சொல்வதில் அவரை மிஞ்ச ஆள் இல்லை என்பது அரசியல் நிபுணர்களின் கருத்து.
தமது கருத்து எதுவாக இருந்தாலும், அது சரியோ, தவறோ சிதறு தேங்காயாக அதே இடத்தில் போட்டு உடைப்பார். தமிழக அரசின் மீது குறிப்பாக திமுக அரசின் மீதும், திராவிட மாடல் ஆட்சி என்ற அம்சத்தையும் தமது பேட்டிகள், கருத்துகளால் கடுமையாக எதிர்ப்பவர்.
இவர் தரும் பேட்டிகள், வெளியிடும் சமூக வலை தள பதிவுகள் எப்போதுமே தனி ரகம். அந்த வகையில் லேட்டஸ்ட்டாக ஹெச் ராஜா வெளியிட்டு உள்ள பதிவு அதிரி புதிரியாகி இருக்கிறது.
அவர் தமது பதிவில் கூறி இருப்பதாவது; 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு ED சம்மன். தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகார வர்கம் முழுவதும் ஊழல்மயம். தமிழக அரசு தப்புவது கஷ்டம். நாட்கள் எண்ணப்படுகின்றன என்று எழுதி இருக்கிறார்.
அவர் எதை மனதில் வைத்து குறிப்பிட்டு இருக்கிறார் என்பது தெரிய வில்லை. ஆனால் இந்த பதிவு இணையத்தில் ஏகத்துக்கும் வைரலாகி இருக்கிறது. அதோடு ஹெச் ராஜாவை கண்டித்தும், அவருக்கு எதிரான விமர்சன பதிவுகளும் வெளியாகி உள்ளன.
356 வது பிரிவை பயன்படுத்த போறீங்களா? தேர்தல் நிதி 4 கோடி ரூபாயை மோசடி செய்தது யார்? ஊழலுக்கு எதிரானவர்கள் போல காட்டிக் கொள்ளும் பாஜகவை மக்கள் அறிவார்கள் என்றும் கருத்துகளை விமர்சகர்கள் பதிவிட்டு உள்ளனர்.