ரேஷன் கடைக்கு இந்த நாட்களில் போகாதீங்க...! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 3 நாள் விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவால் பொருளாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கூறி இருந்தது. அதன்படி ஆட்சி பொறுப்பேற்றதும் மே 10ம் தேதி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர், வீட்டுக்கு வீடு நிவாரண தொகைக்கான டோக்கன் வினியோகிக்கப்பட்டது. 2வது தவணையான 2 ஆயிரம் ரூபாயுடன் 14 வகையான மளிகை தொகுப்பும் கடந்த 3ம் தேதி முதல் வினியோகம் தொடங்கியது.
தமிழக அரசின் சுறுசுறு நடவடிக்கை எதிரொலியாக விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடை ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றினர். அதாவது மே 16ம் தேதி, ஜூன் 4 மற்றும் 11ம் தேதிகளில் விடுமுறை எடுக்காமல் களப்பணியாற்றினர்.
3 பணி நாட்களில் வேலை செய்ததால், அதனை ஈடுகட்ட ரேஷன் பணியாளர்களுக்கு தமிழக அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 17 மற்றும் 24 மற்றும் ஆகஸ்ட் 14 ஆகிய 3 தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு லீவு விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.