அரிசிக்கு ஜிஎஸ்டி ரத்தா? அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
டெல்லி: அரிசி உள்ளிட்ட 14 பொருட்களை சில்லரையாக விற்றால் அதற்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் தயிர், கோதுமை, அரிசி, மைதா உள்ளிட்ட 14 வகையான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியானது 5 சதவீதம் விதிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும எதிர்ப்புகளை பதிவு செய்தது. தமிழகத்தில் அரிசி ஆலைகள் உரிமையாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந் நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
சில்லரை வர்த்தகத்தில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது. அரிசி, ரவை, கோதுமை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி இல்லை.
லேபிள் ஒட்டி விற்கப்படும் பொருட்களுக்கு மட்டும் தான் 5 சதவீதம் ஜிஎஸ்டி. எனவே தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று கூறி உள்ளார்.