அண்ணாமலைக்கு குழி ரெடி…! பகீர் கிளப்பிய தமிழக எம்பி
சென்னை: பாஜகவின் மூத்த தலைவர்களே அண்ணாமலைக்கு பெரிய குழியை தோண்டி வருகின்றனர் என்று திமுக எம்பி செந்தில்குமார் கூறி இருக்கிறார்.
தமிழக அரசியலில் திமுகவையும், தமிழக அரசையும் எந்நேரமும் விமர்சித்து வருபவர் அண்ணாமலை. அதிரடியாக செய்து, மக்களையும், கட்சியையும் எந்நேரமும் தமது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம் என்று ஒவ்வொரு முறையும் அவர் எடுக்கும் செயல்கள் பூமராங்காக மாறி விடுவதால் சொந்த கட்சிக்குள்ளே அண்ணாமலைக்கு எதிர்ப்புகள் அதிகம்.
தமிழக பாஜக தலைவராக அவர் நியமனம் என்ற அறிவிப்பு வெளியான உடனே அந்த பதவியை எதிர்பார்த்திருந்த சீனியர் தலைகள் வாயில் மிளகாய் கடித்ததை போன்று உணர்ந்தனர். கடும் விமர்சனங்கள், அதிருப்திகளுக்கு இடையே அவர் தலைவராக இருந்தாலும் அண்மைக்கால நடவடிக்கைகள் டெல்லி தலைமையை கோபம் அடைய வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பிடிஆர் விஷயம் தேசிய ஊடகங்களில் பெரும் வைரலாக, செருப்பு வீச்சு விஷயத்தில் சிக்கிய ஆடியோவால் பாஜகவுக்கு கெட்ட பெயரே வந்து சேர்ந்தது. இதில் அண்ணாமலை பேசிய ஆடியோ அதை மேலும் வெட்ட வெளிச்சமாக்க, தமிழக பாஜக சீனியர் மற்றும் அண்ணாமலை எதிர்ப்பு தலைவர்கள் ஏக குஷியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந் நிலையில் திமுக எம்பி செந்தில்குமார் கூறியிருக்கும் ஒரு கருத்து மிக முக்கியமாக பாஜகவுக்குள்ளே விவாதிக்கப்பட்டு வருகிறது. அவர் கூறியது இதுதான்:
பிடிஆர் குறித்து அண்ணாமலை பேசியிருப்பது விரக்தியின் வெளிப்பாடு. அவரின் செயல்கள் கட்சி தலைமைக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆகவே தான் அவரை கண்காணிக்க மத்திய இணையமைச்சரான எல். முருகனை நியமித்து அதிகாரத்தையும் குறைத்து இருக்கிறார்கள்.
கட்சி தலைமையின் அதிருப்தியை சரிகட்ட அண்ணாமலை முயற்சித்து வருகிறார். ஆனால் அவரது கட்சியில் உள்ள மூத்த தலைவர்களே அண்ணாமலைக்கு பெரிய குழியை தோண்டி வைத்திருக்கின்றனர் என்று கூறி இருக்கிறார்.
செந்தில்குமார் எம்பியின் இந்த கருத்துகளை இருக்கட்டும் பார்க்கலாம் என்று புறந்தள்ளிவிட முடியாது என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். தமிழக பாஜகவில் துடிப்பான தலைமை தேவை என்ற அடிப்படையில் அண்ணாமலை நியமிக்கப்பட்டாலும், நாட்கள் நகர, நகர அவரது நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.
பொதுவெளியில் எப்போதும் தாம் பேசப்படும் நபராக இருக்க வேண்டும் என்பதற்காக ஆவேச அரசியல் நடவடிக்கைகளை அவர் மேற்கொள்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அனைத்து புள்ளிகளையும் இணைத்தால் அழகான கோலம் உருவாகும் என்பது போல, அண்ணாமலைக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளும் காணாமல் போகும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்…!