எம்எல்ஏ ஹாஸ்டல்… வேலுமணி கையில் மாத்திரை…! ‘ஷாக்’கான அதிகாரிகள்
சென்னை: எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டின் போது நடந்த ஒரு முக்கியமான விஷயம் இப்போது காவல்துறை மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மொத்தம் 12 மணி நேரம்…. காலை 6 மணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இல்லம், அலுவலகங்களில் தொடங்கிய ரெய்டு மாலை 6 மணிக்கு முடிந்தது. கிட்டத்தட்ட சப்ஜாடாக ஒரு நேரத்தில் 60 இடங்களில் ரெய்டு நடந்தது.
வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது எப்ஐஆர் பதிவாகி இருக்கிறது. அவருக்கு சொந்தமான வீடுகள்,அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், கிடைத்த ரொக்கம், ஆவணங்களை பட்டியலிட்டு உள்ளனர். அதாவது 2 கோடி ரூபாய் மதிப்பில் வைப்பு தொகை ஆவணம், 13.08 லட்சம் ரூபாய், டெண்டர் பரிவர்த்தனைகள், மாநகராட்சியின் ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரெய்டு முடிந்தாலும், அப்போது நடந்த சில முக்கிய விவகாரங்கள் வெளியில் கசிந்து இருக்கின்றன. முக்கியமாக சென்னை எம்எல்ஏ ஹாஸ்டலில் அவரது அறையில் என்ன நடந்தது என்பது பற்றி விவரங்கள் அதிகாரிகள் மட்டத்தில் பரவலாக இப்போது பேசப்படுகிறது.
அதன் விவரம் இதோ: தமிழகம் முழுக்க ரெய்டு நடந்த போது சென்னையில் தமக்கு ஒதுக்கப்பட்ட எம்எல்ஏ ஹாஸ்டல் அறையில் வேலுமணி இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு டஜனுக்கும் அதிகமான அதிகாரிகள் ஹாஸ்டலில் உள்ள அவரது அறைக்குள் நுழைந்திருக்கின்றனர்.
வந்தவுடன் சினிமாவில் பலரும் பார்த்திருப்பது போன்று வேலுமணி கையில் இருந்த செல்போனை தான் வாங்கி வைத்திருக்கின்றனர்.
எம்எல்ஏ ஹாஸ்டல் 10வது மாடி… 10ம் நம்பர் அறை இதுதான் வேலுமணியின் அறையாகும். மாடிக்கு சென்றவுடன் அதிகாரிகள் பண்ணிய முதல் வேலை… லிப்டில் 10வது ப்ளோருக்கு யாரையும் வரவிடாமல் செய்ததுதான்.
கீழே வேலுமணி ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினர் என பெரும் கூட்டம் கூடியிருக்கிறது. ரெய்டுக்கு வந்த அதிகாரிகள் குழுவின் ஒட்டு மொத்த காலணிகளும் வேலுமணி அறை வாசலில் கழற்றிவிடப்பட்டன. தாங்கள் யார்? எதற்காக வந்திருக்கிறோம் என்ற அனைத்து விவரங்களையும் உரிய ஆதாரத்துடன் காண்பித்துவிட்டு உள்ளே அதிகாரிகள் சென்றிருக்கின்றனர்.
வேலுமணியின் செல்போன் ரெய்டு அதிகாரிகள் கைவசம் போனதால் யாருக்கும் அவரால் போன் செய்யமுடியவில்லை. செல்போனுக்கு வந்த கால்களையும் அதிகாரிகளே அட்டென்ட் பண்ணி விவரம் கேட்டுள்ளனர். பின்னர் அந்த அழைப்பு எண்களையும் குறித்து வைத்து கொண்டுள்ளனர்.
தங்கள் கைவசம் இருந்த ஆவணங்களை முன்வைத்து வேலுமணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். விசாரணை, கேள்விகள் ஒரு பக்கம் நடக்க, நடக்க…. வேலுமணி திடீரென சில மாத்திரைகளை சாப்பிட தயாராகி இருக்கிறார்.
என்ன என்று பதறி, வெலவெலத்து போன அதிகாரிகள் குழு அது பற்றி விசாரித்துள்ளது. வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளே அவை என்று விளக்கிய பின்னரே காவல்துறை அதிகாரிகள் ஆசுவாசம் ஆனார்களாம். அப்படியாக ஆகஸ்ட் 10ம் தேதி முழுவதும் வேலுமணியின் ரெய்டு நாள் கடந்திருக்கிறது.. அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.