5 மாதங்கள் கழித்து சாலைகளில் வலம் வந்த பேருந்துகள்…! டிக்கெட் விலை உயர்வா?
சென்னை: 5 மாதங்கள் கழித்து தமிழகத்தில் பேருந்து சேவை இன்று தொடங்கி இருக்கிறது.
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக பொது போக்குவரத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் பேருந்து சேவைகள் 161 நாட்களுக்கு பிறகு இன்று தொடங்கி உள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் இருக்கும் தலைநகர் சென்னையில் இன்று காலை முதல் மாநகரப் பேருந்துகள் சாலைகளில் வலம் வர தொடங்கி உள்ளன.
சென்னையில் மட்டும் 3300 பேருந்துகளும், தமிழகம் முழுக்கவும் 20,000 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில் பேருந்தில் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. ஒரு பேருந்தில் பயணிக்க 24 பேருக்கும் மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அதாவது ஒரு வரிசையில் உள்ள இருக்கைகளில் ஒருவர் மட்டுமே அமர வேண்டும். உட்கார்ந்து செல்ல மட்டுமே அனுமதி, யாரும் நின்றுகொண்டோ அல்லது படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு சாகசம் செய்யவோ அனுமதி கிடையாது.
பேருந்துகளில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. இதற்கு முன்பு வசூலிக்கப்பட்ட அதே டிக்கெட் கட்டணங்கள் தான் பெறப்படுகின்றன. சென்னையில் எந்த பகுதி வரை பேருந்து சேவை என்பது பற்றியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூர் வரை, ஜிஎஸ்டி சாலையில் கூடுவாஞ்சேரி வரை, ஈசிஆர் சாலையில் கோவளம் வரை, பூந்தமல்லி சாலையில் திருமழிசை வரை, செங்குன்றம் சாலையில் பாடி வரை பேருந்துகள் இயக்கப்படும்.