இனி.. வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்..! எப்படி..?
டெல்லி: கொரோனா உள்ளதா, இல்லையா என்பதை இனி வீட்டிலே சோதித்து கொள்ள வசதியாக உருவாக்கப்பட்டு உள்ள கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர் ஒப்புதல் தந்திருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் சற்றே குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனாலும் கொரோனாவின் 3வது அலை எப்படி இருக்கும் என்று தெரியாததால் கொரோனா தடுப்பு வழிகளை பின்பற்றுமாறு, சுகாதாரத்துறை நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந் நிலையில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை அறிய ஒரு கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.
புனேவை சேர்ந்த மைலேப்(mylab) டிஸ்கவரி சொல்யூசஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த கருவியை தயாரித்து இருக்கிறது. இதன் விலை 20 ரூபாய். வெறும் 15 நிமிடங்களுக்குள் கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த கருவியை கொரோனா அறிகுறி உள்ளவர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறி உள்ளது. இந்த கருவியை பயன்படுத்தும் போது கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு என்றால் கொரோனா இருக்கிறது என்று அர்த்தம்.
மாறாக, நெகட்டிவ் என்று வந்தால் உடனே அவர்கள் ஆர்டி பிசிஆர் சோதனையை தவறாது செய்து கொள்ள வேண்டும் என்று ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது.