ஆமாம்…! பாஜகவிடம் பணம் வாங்கினேன்…! ஒப்புக்கொண்ட சவுக்கு சங்கர்
சென்னை: திமுகவுக்கு எதிராக பேச… பாஜகவில் ஏன் இணையக்கூடாது என்று சவுக்கு சங்கர் கூறி உள்ளார்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், குளறுபடிகள் இருப்பதாகவும் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து, பெரும் கலவரம் உருவானது.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. பள்ளி தாளாளர் ரவிகுமார், செயலாளர் சாந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மாணவி மரணம் குறித்த உடற்கூறு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விசாரணை மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாகவும் தமிழக காவல்துறை மற்றும் அரசுக்கு எதிராகவும் பேசி வருபவர் சவுக்கு சங்கர். பல்வேறு தொலைக்காட்சிகளில் டிசைன் டிசைன் அடைமொழியுடன் நேர்காணல்களில் கலந்து கொண்டு பேசுபவர்.
ஒரு சமயம் பத்திரிகையாளர் என்ற பெயரில், இன்னொரு சமயம் அரசியல் விமர்சகர் என்ற பெயரில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வருபவர். தற்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன் வைத்த அவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதில் சிறப்பு செய்தியாளர் முக்தார் கேட்ட கேள்விகளால் திணறி போனார் சவுக்கு சங்கர். குறிப்பாக, கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாகவும், பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாகவும் பேசுவது ஏன்? பாஜக அண்ணாமலையின் குரலாக பேசுவதற்கு என்ன காரணம் என பல கேள்விகளை கேட்டார் சிறப்பு செய்தியாளர் முக்தார்.
50 பேருந்துகள் எரியும் அளவுக்கு எப்படி கலவரம் நிகழ்ந்தது? இதுபோன்ற கலவரம் தமிழகத்தில் எங்கும் நிகழவில்லை... 3 நாட்களாக மாணவி உடலை வைத்து கொண்டு ஒரு ஊரில் பிரச்னை எழுந்து கொண்டு இருக்கும் போது அதை கேட்காத முதல்வர் என்ன முதல்வர் என்ற கேள்வி எழுகிறது என்று சவுக்கு சங்கர் கூறினார்.
சவுக்கு சங்கர் ஏன் பாஜக பற்றி பேசாமல் உள்ளார் என்று சிறப்பு செய்தியாளர் முக்தார் கேள்வி எழுப்ப, ஒரு பள்ளியை கொளுத்தும் போது காவல்துறை தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று பதில் கேள்வி எழுப்பினார்.
கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஒரு உயிர்பலி இல்லாமல் கட்டுக்கோப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், தூத்துக்குடியில் 13 பேர் பலியானதை போல் அல்ல என்றும் முக்தார் பேசினார். தொடர்ந்து நடைபெற்ற இந்த நேர்காணலில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் சவுக்கு சங்கர் திணறித்தான் போனார் என்று கூறலாம்.
குற்றச்சாட்டுக்கு ஆளான பள்ளி நிர்வாகத்தை காப்பாற்ற தான் முயல்வதாகவும், அப்படித்தான் செய்வேன், நான் பாஜகவிடம் பணம் வாங்கி கொண்டு பேசுங்கள் என்று சொல்லிக் கொள்ளுங்கள் என கிண்டலாக பேசினார் சவுக்கு சங்கர்.
பள்ளி நிர்வாகத்தினருக்கு ஜாமீன் கிடைத்துவிடும், சட்டம் அதை தான் சொல்கிறது என்று கூறினார். இந்த சம்பவம் பற்றி காவல்துறை விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கும் போது, காதல் தோல்வியால் மாணவி இறந்தார்,தற்கொலை என்று ஏன் பேசுகிறீர்கள், அப்படி ஏன் பேச வேண்டும் என்றும் சிறப்பு செய்தியாளர் முக்தார் கேட்க உண்மையில் திணறினார் சவுக்கு சங்கர்.
தற்கொலை என்று முந்திக் கொண்டு சொல்ல வேண்டிய நிர்பந்தம் என்ன என்று முக்தார் கேட்க… கேட்க, மழுப்பலாக பதில் கூறினார் சவுக்கு சங்கர். மைக்கேல்பட்டி விவகாரத்தில் படுவேகமாக களம் இறங்கிய பாஜக ஏன் இப்போது அமைதியாக இருக்கிறது என்று நீங்கள் கேட்கவில்லை என்று கேட்கிறார் முக்தார்.
நேர்காணலில் தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளை முக்தார் கேட்க… கேட்க அண்ணாமலை பேசினால் என்ன? நான் பேசினால் என்ன என்று பதில் கேள்வி எழுப்பினார் சவுக்கு சங்கர்.
வருமானம் இல்லாமல் சவுக்கு சங்கர் பேசமாட்டார், பாஜகவுக்கு ஆதரவாக, வருமானத்தை ஈட்டிக் கொண்டு பேசி வருகிறார் கரெக்டா என்று முக்தார் கேட்க, அதை ஆமோதித்து ரைட் என்கிறார் சவுக்கு சங்கர். இந்த நேர்காணலை பார்த்த பலரும், சவுக்கு சங்கருக்கு எதிராகவும், சிறப்பு செய்தியாளர் முக்தாரை பாராட்டியும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.