என்ன தான் சொல்ல வர்றே..? ஞானத்தை நசுக்கிய சசி…!
சென்னை: போலியான வருத்தத்துக்கு உண்மையை பலி கொடுக்க முடியாது என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இயக்குநர் சசிக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
பருத்திவீரன் படம் தொடர்பாகவும், அதன் இயக்குநர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். அவரின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்திய அதே வேளையில், அமீருக்கு ஆதரவாக திரையுலகின் முக்கியமானவர்கள் ஒன்று திரண்டனர்.
அந்த வரிசையில் பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பாரதி ராஜா, சசிக்குமார் ஆகியோர் முக்கியமானவர்கள். எதிர்பார்க்காத எதிர்ப்புகள் வந்ததால் மெதுவாக பம்மிய ஞானவேல்ராஜா, இன்று அமீருக்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த அறிக்கையில் எந்த கையெழுத்தும் இல்லை, யாருக்காக வருத்தம் தெரிவிக்கிறார் என்ற தெளிவும் இல்லை.
இந் நிலையில், ஞானவேல்ராஜாவை கண்டித்தும், அவரது அறிக்கை குறித்து இயக்குநர் சசிக்குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.
அதில் உள்ள விவரம் வருமாறு:
அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?
நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்…. என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன?
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்?
இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? என்று சசிக்குமார் கேட்டுள்ளார்.
குற்றச்சாட்டு, பேட்டி, அறிக்கை, வருத்தம் என இந்த விவகாரம் முடிந்தது போன்று காணப்பட்டாலும் அதில் நிஜம் இல்லை என்பதை தான் சசிக்குமார் அறிக்கை சுட்டிக்காட்டுவதாக விவரம் அறிந்த கோலிவுட் பட்சிகள் கூற தொடங்கி உள்ளன.